கஷ்டங்கள் இல்லாத மனிதன் என்பவன் இருக்கவே முடியாது. எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அந்த கஷ்டங்களில் இருந்து வெளியில் வருவதுதான் முக்கியம். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கவில்லை, கஷ்டத்திற்கு மேல் கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? என்று பலரும் புலம்ப கேள்வி பட்டு இருக்கிறோம். ஏன் நாமே சில நேரங்களில் இப்படி புலம்பி இருப்போம். இந்த புலம்பலை தீர்த்து நம்முடைய கஷ்டங்களை நீக்கும் அற்புதமான தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்கள் காணாமல் போக வாராகி வழிபாடு
உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கும் எப்பேர்பட்ட கஷ்டங்களும் படிப்படியாக விலகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் நாம் வணங்கக்கூடிய சிறப்பான தெய்வங்கள் ஒருவராக திகழ்வதுதான் வாராகி அம்மன். வாராகி அம்மனை தொடர்ச்சியாக முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு எண்ணில் அடங்காத பலன்கள் கிடைக்கிறது என்று பலரும் அனுபவபூர்வமாக கூறுகிறார்கள். அப்படிப்பட்ட வாராகி அம்மனை கஷ்டங்கள் நீங்குவதற்கு மிளகை வைத்து எப்படி வழிபாடு செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அல்லது புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை இந்த தினங்களில் செய்யலாம். இரவு 9 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு காரணமாக திகழக்கூடியவர்கள் நவகிரகங்கள். இந்த நவகிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வாராகி அம்மனை நினைத்து நாம் இந்த வழிபாட்டை செய்கிறோம்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு தர்ப்பைப்புல் வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் பச்சை கற்பூரம் இருந்தால் கூட போதும். மேலும் நவகிரகங்கள் என்பதால் 9 என்ற எண்ணிக்கையில் மிளகு வேண்டும். மேல் சொன்ன நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து இரவு 9 மணிக்கு மேல் வீட்டு தலை வாசலுக்கு வெளியே வந்து ஒரு பழைய மண் தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் தர்ப்பை புல் இருக்கும் பட்சத்தில் அதை வைத்து எரிய விட வேண்டும். பச்சை கற்பூரமாக இருக்கும் பட்சத்தில் அதை வைத்து எரிய விட வேண்டும். இப்படி நாம் எரிய வைக்கும் பொழுது குலதெய்வத்தையும் விநாயகப் பெருமானையும் வாராஹி அம்மனையும் மனதார நினைத்துக் கொண்டு எரிய விட வேண்டும்.
இது எரிய ஆரம்பித்ததும் 9 மிளகை கையில் வைத்துக்கொண்டு நவகிரகங்களை மனதார நினைத்துக் கொண்டு ஒவ்வொரு மிளகாக அந்த நெருப்பில் போட வேண்டும். இப்படி நாம் மிளகை நெருப்பில் போடும்போது மிளகு வெடித்து சிதறும். இப்படி வெடிப்பதன் மூலம் நம்முடைய கஷ்டங்களும் பிரச்சனைகளும் வாராகி அம்மனின் அருளால் சிதறி ஓடும் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 11 முறை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ஆரம்பித்தால் வெள்ளிக்கிழமை தோறும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்று நம்முடைய வசதிக்கேற்ப தொடர்ச்சியாக 11 முறை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாராகி அம்மனின் அருளால் நிம்மதியாக வாழ்வார்கள்.
வாராஹி அம்மனை முழுமனதோடு நினைத்துக் கொண்டு இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும், தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.