கத்திரிக்காய் கடையல் செய்முறை.

kathirikai kadaisal
- Advertisement -

இல்லத்தரசிகள் தங்களுடைய காலை மற்றும் இரவு சிற்றுண்டிகளுக்கு தொட்டுக் கொள்வதற்கு எப்பொழுதும் சட்னி, சாம்பார் என்று வைப்பதற்கு பதிலாக வித்தியாசமான சுவையிலும் அதேசமயம் கத்திரிக்காயின் சத்துக்களும் சென்றடையும் வகையில் கத்திரிக்காயை வைத்து எளிமையான கத்திரிக்காய் கடையலை செய்து தரலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கத்திரிக்காய் கடையலை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம.

கத்திரிக்காயில் நீர்ச்சத்து, விட்டமின் சி, இரும்புச்சத்து அதிகளவில் இருக்கிறது. கத்திரிக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமம் மென்மையாகும். நரம்புகள் வலுவாகும். சளி, இருமல் குறையும். சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய், கீழ்வாதம், மலச்சிக்கல், தொண்டை கட்டு, உடல் பருமன் போன்றவற்றை குணப்படுத்தும் காயாக கத்திரிக்காய் திகழ்கிறது. மேலும் இது மூளை செல்களை பாதுகாக்கவும் உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயை தடுக்கும் ஆற்றலும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மன அமைதியை தரவும் கத்திரிக்காய் உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கத்திரிக்காய் – 1/4 கிலோ
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 2
  • சின்ன வெங்காயம் – 15
  • பாசிப்பருப்பு – 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – 2 கிளாஸ்
  • எண்ணெய் – 1 ஸ்பூன்
  • கடுகு – 1/2 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • காய்ந்த மிளகாய் – 3
  • பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய கத்திரிக்காயை அதில் சேர்த்து, பச்சை மிளகாய், இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, ஊறவைத்த பாசிப்பருப்பு, ஒரு கிளாஸ் தண்ணீர் இவை அனைத்தையும் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து விட வேண்டும்.

குக்கரில் மூன்று விசில் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். விசில் முழுவதும் போன பிறகு கீரை கடையும் மண்சட்டியில் இந்த கத்திரிக்காயை சேர்த்து மத்தை பயன்படுத்தி நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். சட்டி இல்லாதவர்கள் குக்கரில் மத்தை வைத்து கடைந்து கொள்ளலாம். மிக்ஸி ஜாரில் போடுவதை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

கத்திரிக்காய் கடையல் தயாராகிவிட்டது. இதை தாளிப்பதற்கு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் இவற்றை சேர்க்க வேண்டும். அதை அப்படியே நாம் கடைந்து வைத்திருக்கும் கத்திரிக்காயில் சேர்த்து விட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் மறுபடியும் ஊற்றி அடுப்பில் வைத்து விட வேண்டும். ஒரு கொதி வந்த பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வித்தியாசமான சுவையில் முட்டை கிரேவி ரெசிபி
சுவையான கத்திரிக்காய் கடையல் தயாராகிவிட்டது. மிகவும் எளிமையான அதே சமயம் சத்து மிகுந்த, சுவையும் அபாரமாக இருக்கக்கூடிய கத்திரிக்காய் கடையலை செய்து கொடுப்பதன் மூலம் கத்திரிக்காயின் முழு பயனையும் நம்மால் அடைய முடியும்.

- Advertisement -