வித்தியாசமான சுவையில் முட்டை கிரேவி ரெசிபி

egg curry recipe
- Advertisement -

நாம் வீட்டில் எப்போது சமைத்தாலும் டிபன் வகைகளுக்கு ஒரு விதமான சைடு டிஷும் சாதம் போன்றவற்றுக்கு ஒரு விதமான சைட் டிஷும் செய்வோம். இதனாலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக நேரம் சமையலுக்கு செலவிட வேண்டியதாக இருக்கும். அப்படி அல்லாமல் டிபன், சாதம் என அனைத்திற்கும் ஏற்ற ஒரு பக்கா சைடு டிஷ் ரெசிபியை தான் இப்போது நாம் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 5,
வெங்காயம் – 3,
தக்காளி – 3,
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத் தூள் -1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1 டீஸ்பூன்,
கருவேப்பிலை -1,கொத்து
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -1 கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள், உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத்தூள் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்பொழுது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.

அடுத்து இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தேய்த்து விட்டு தயார் செய்து வைத்து இருக்கும் முட்டை கலவையை இதில் ஊற்றி இட்லி வேக வைப்பது போல் முட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே ஒரு புறம் இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான உடன் சோம்பு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் பாதி அளவு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் நன்றாக நிறம் மாறி வரும் வரை வதக்க வேண்டும்.

அதன் பிறகு மூன்று தக்காளியை மிக்ஸியில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளியை மைய அரைக்க கூடாது. இவை எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா உப்பு அனைத்தையும் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வதக்கி விடுங்கள். இதன் பச்சை வாசனை முழுவதுமாக நீங்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு பத்து நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். 10 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்து விடும். பிறகு ஏற்கனவே வேக வைத்த முட்டைகளை சின்ன சின்னதாக நறுக்கி இந்த குழம்பில் சேர்த்து மீண்டும் தட்டு போட்டு இரண்டு நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.

இந்த முட்டையில் குழம்பில் உள்ள காரம் மசாலா அனைத்தும் கலந்து அருமையான சுவையில் கமகமவென்று வாசத்துடன் வித்தியாசமான முட்டை கிரேவி தயார் ஆகிவிடும். கடைசியாக இருக்கும் போது கொத்த மல்லி மேலே தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பஞ்சாபி ஸ்டைல் வெண்டைக்காய் மசால் செய்முறை

இந்த கிரேவி அனைத்து டிபன் வகைகளுக்கும் நன்றாக இருக்கும் சாதத்துடன் போட்டு சாப்பிடவும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள்.

- Advertisement -