கத்திரிக்காயை வைத்து இப்படி கூட பச்சடி சமைக்கலாமா? காலையில் இதை செய்து விட்டால் மூன்று வேலைக்கும் குழம்பு பிரச்சனை இல்லை.

katharikkai-pachadi
- Advertisement -

காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது இந்த கத்திரிக்காய் பச்சடி செய்து விடுங்கள். காலையில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி இவைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மதியம் சுடு சாதத்திற்கு இதை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். மீதம் இருந்தால் ராத்திரி ஏதாவது டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். ஒரே ஒரு சைட் டிஷ் தான். ஆனால் நிறைவான டிஷ். ஆரோக்கியம் தரக்கூடிய அசத்தலான இந்த கத்திரிக்காய் பச்சடி ரெசிபி தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வமாக இருக்குதா. வாங்க பார்க்கலாம்.

செய்முறை

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் – 1/4 கிலோ, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் – 2, போட்டு தேவையான அளவு மஞ்சள் பொடி போட்டு, 1/2 டம்ளர் அளவு மட்டும் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தக்காளி பழத்திலிருந்து உங்களுக்கு நிறைய தண்ணீர் விடும். வெந்த தக்காளி பழத்தையும் கத்தரிக்காயையும் ஒரு கரண்டியை வைத்து லேசாக மசித்து விட்டு, மீண்டும் இந்த குக்கரை அடுப்பில் வைக்க வேண்டும். இதில் தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், தேவையான அளவு – உப்பு, போட்டு மசாலா பொருட்களை எல்லாம் நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்து விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து இப்போது இந்த குழம்பை கொதிக்க வையுங்கள்.

இதோடு ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு – புளியை எடுத்து கரைத்து ஊற்ற வேண்டும். குழம்பு பச்சை வாடை போக கொதிக்கட்டும். அடுப்பு சிம்மிலேயே இருக்கட்டும். இதற்கு ஒரு தேங்காய் அரைவை அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. 2 கைப்பிடி அளவு – தேங்காய் துருவல், 3 ஸ்பூன் மட்டும் தண்ணீர் ஊற்றி, இதை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தேங்காய் அரை பட்டு வந்தவுடன் அரைத்த தேங்காயோடு தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், சீரகம் – 1/2 ஸ்பூன், சேர்த்து ஒரு ஓட்டு மட்டும் ஓட்டுங்க. வெங்காயம் சீரகம், தேங்காயோடு சேர்ந்து கொரகொரப்பாக அரைபட்டால் மட்டும் போதும். இந்த விழுதை அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி நன்றாக கலந்து விட்டு மீண்டும் குழம்பை 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதற்கு ஒரு ஸ்பெஷல் தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், நன்றாக இடித்த பூண்டு பல் – 4, கருவேப்பிலை – 1 கொத்து, மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 ஸ்பூன் அளவு, போட்டு எண்ணெயிலேயே சிவக்க விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால், நிச்சயமாக அந்த தங்கம் உங்களோடு நிரந்தரமாக இருக்காது. ஆசை ஆசையாக வாங்கிய தங்கம், உங்கள் கையை விட்டு போக நீங்கள் செய்யும் இந்த தவறும் ஒரு காரணம் தான்.

வெங்காயம் பொன்னிறம் வந்தவுடன் இந்த தாளிப்பை அப்படியே தயாராக இருக்கும் கத்தரிக்காய் பச்சடியில் ஊற்றி, கலந்து மேலே கொத்தமல்லி தழைகளை தூவி அப்படியே சுட சுட சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி கிடைக்கும். தொட்டுக் கொள்ள ஒரு வத்தல் இருந்தால் கூட போதும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசை சப்பாத்திக்கு கூட தொட்டு சாப்பிடலாம்.

- Advertisement -