பாரம்பரியமான கேழ்வரகு இட்லி இவ்வளவு சுலபமாக செய்து விடலாமா? எலும்பு தேய்மானம் பிரச்சனையை தீர்க்கும் கால்சியம் நிறைந்துள்ள இந்த கேழ்வரகு இட்லியை எப்படி அவிப்பது?

ragi-idli-maavu
- Advertisement -

இன்று இருக்கும் பெரும்பாலான உணவு வகைகளில் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. இதனால் எலும்பு தேய்மானம் என்பது மிக விரைவாகவே வந்து விடுகிறது. குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த எலும்பு தேய்மான பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் கால்சியம் குறைபாட்டை நீக்கக்கூடிய அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு. இந்த கேழ்வரகை வைத்து விதவிதமான உணவு பண்டங்கள் செய்து சாப்பிடலாம். அதில் இந்த மெத்தென்ற சாஃப்ட்டான இட்லி எப்படி அவிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – ஒரு கப், இட்லி அரிசி – அரை கப், உளுந்து – அரை கப், வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கேழ்வரகு இட்லி செய்முறை விளக்கம்:
சுவையான கேழ்வரகு இட்லி செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் எந்த கப்பில் கேழ்வரகு எடுத்தீர்களோ, அதே கப் அளவிற்கு இட்லி அரிசி அரை கப் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல உளுந்து அரை கப் அளவிற்கு சேர்த்து, வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு நன்கு நாலைந்து முறை தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

ஐந்து மணி நேரத்திற்கு பிறகு எல்லா பொருட்களும் நன்கு ஊறி இருக்கும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு அரைக்க பெரிய மிக்ஸி ஜார் எடுப்பது நல்லது அல்லது நீங்கள் வெட் கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். மாவை நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீர் சேர்த்து விட வேண்டாம். அதே போல கெட்டியாகவும் அரைத்து விடக்கூடாது.

- Advertisement -

பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஆறு மணி நேரம் நன்கு ஊறிய பிறகு மாவு புளித்து நுரைத்து இருக்கும். இப்போது ஒரு கரண்டியை வைத்து நன்கு கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இந்த மாவை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல ஊற்றி வேக வையுங்கள். பொதுவாக இட்லி அவிக்க ஏழு நிமிடம் போதும்! ஆனால் இதில் ராகி சேர்க்கப்பட்டுள்ளதால் 15 நிமிடம் வரை நன்கு அவிக்க வேண்டும். அப்போது தான் மெத்தென்று அவிந்து வரும்.

இந்த சுவையான ராகி இட்லியுடன் தொட்டுக் கொள்ள காரசாரமான காரச் சட்னி அல்லது வெங்காய சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிடலாம். இதே மாதிரி தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து தோசை வார்த்தால் இன்னும் சூப்பராக மொறு மொறு என்று ராகி தோசை நமக்கு கிடைக்கும். ஆரோக்கியம் அள்ளித்தரும் இந்த ராகி இட்லி, தோசையை அடிக்கடி வீட்டில் செய்து சாப்பிடுங்கள். இதில் ராகிக்கு பதிலாக வரகு சேர்த்தும் செய்யலாம்.

- Advertisement -