கேழ்வரகு காரப்புட்டு அசத்தலான சுவையில் பத்தே நிமிடத்தில் இப்படி செஞ்சு பாருங்க, ஆரோக்கியம் அதிகரிக்கும்!

ragi-kara-puttu
- Advertisement -

கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் கேழ்வரகு கொண்டு செய்யப்படும் இந்த கார புட்டு ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த கேழ்வரகு கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். கேழ்வரகு மாவினை வேக வைத்து தாளிப்பு கொடுத்து செய்யக்கூடிய இந்த காரப் புட்டு குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இந்த ஆரோக்கியம் மிகுந்த கேழ்வரகு கார புட்டு எப்படி செய்வது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ragi-1

கேழ்வரகு காரப்பட்டு செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – ஒரு கப், தண்ணீர் – அரை கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, மல்லித்தழை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

கேழ்வரகு காரப் புட்டு செய்முறை விளக்கம்
கேழ்வரகு காரப்பட்டு செய்ய முதலில் கேழ்வரகு மாவு ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த கப்பில் மாவு எடுக்கிறீர்களோ, அதே அளவிற்கு அரை கப் தண்ணீர் எடுத்து அதனை தெளித்து தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும். மாவு ஈரத்தன்மையுடன் உதிரி உதிரியாக இருக்க வேண்டும் அவ்வளவு தான்.

ragi 1

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இட்லி துணியில் இந்த மாவினை உதிர்த்து மூடி வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த இந்த மாவினை ஒரு பாத்திரத்தில் கொட்டி உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பருப்பு வகைகள் வதங்கி வரும் பொழுது, ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி போடுங்கள், பின்னர் அதனுடன் வேர்க்கடலையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். விரும்பினால் முந்திரி பருப்புகளை உடைத்தும் சேர்க்கலாம். எல்லாவற்றையும் நன்கு வறுத்த பின் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

ragi-kara-puttu1

வெங்காயம் வதங்கி வரும் சமயத்தில் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதங்கி வரும் பொழுது நீங்கள் உதிர்த்து வைத்துள்ள கேழ்வரகு மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு மாவை சேர்த்த பின்பு லேசாக பிரட்டி எடுத்தால் போதும். அதிகம் கிளற வேண்டிய அவசியமில்லை. இப்போது தேங்காய் துருவலை சேர்த்து ஒன்றிரண்டு முறை நன்கு பிரட்டி எடுத்த பின்பு அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாற வேண்டியது தான். ரொம்பவே ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கேழ்வரகு மாவை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விடலாமே!

- Advertisement -