நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளுக்கும் காரணமாக திகழக்கூடியவர் குரு பகவான். குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவது உண்டு. அப்படிப்பட்ட குரு பகவானின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருந்தாலும் அவற்றை சிறப்பாக செய்வதற்குரிய நாள் என்று ஒன்று வேண்டுமல்லவா? அப்படி பார்க்கும் பொழுது ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வியாழக்கிழமை குருபகவானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. குருவின் நட்சத்திரமான பூச நட்சத்திரமும் வியாழக்கிழமையும் ஒருசேர வரக்கூடிய நாளை தான் நாம் குரு புஷ்ய யோகம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட நாள் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வருகிறது. அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கோடீஸ்வர யோகம் தரும் வழிபாடு
ஒருவருடைய வாழ்க்கையில் கோடிகளில் சம்பாதிக்க வேண்டும் என்றாலும், தங்க நகைக்கு எந்தவித பஞ்சமும் இருக்கக் கூடாது என்றாலும், ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க வேண்டிய அனைத்து விதமான சுபகாரியங்களும் எந்தவித தடையும் இன்றி நடைபெற வேண்டும் என்றாலும், அதற்கு குருவின் அருள் என்பது வேண்டும். ஒருவருக்கு குருவின் அருள் இருந்து விட்டால் அவருடைய வாழ்க்கையில் எந்தவித கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலையே இருக்காது என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு வியாழக்கிழமை எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் பூச நட்சத்திரமும் மிகவும் முக்கியமான ஒரு நாளாக கருதப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நாளில் நாம் குரு பகவானை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு குரு புஷ்ய யோகம் ஏற்படும்.
பொதுவாக குரு புஷ்ய யோகம் வரக்கூடிய நாளில் தங்கத்தை நாம் வாங்குவதன் மூலம் அதிக அளவில் தங்கம் சேரும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட அட்சயதிதியைப் போலவே இந்த குரு புஷ்ய யோகம் வரக்கூடிய நாளும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாள் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி வருகிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் 21ன் கூட்டுத் தொகை மூன்று என்பது குரு பகவானின் எண். மேலும் ஆவணி மாதம் ஐந்தாம் தேதி இது வருகிறது. 5 என்பது குபேர பகவானுக்குரிய எண். குரு மற்றும் குபேர பகவானுக்குரிய கிழமை வியாழக்கிழமை. ஆக இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் மிகவும் எளிமையான முறையில் குருவை நாம் வழிபாடு செய்யும்பொழுது குருவருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒன்றே ஒன்றுதான் வேண்டும். அதுதான் குரு பகவானின் அம்சம் பொருந்திய மஞ்சள் தூள். இது கஸ்தூரி மஞ்சளாகவும் இருக்கலாம், பூசு மஞ்சளாகவும் இருக்கலாம், சமையலுக்கு உபயோகப்படுத்தக்கூடிய மஞ்சள் ஆகவும் இருக்கலாம். இதற்கு ஒரே ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் இருந்தால் போதும். வியாழக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் குரு ஹோரை வரும். அந்த நேரத்தில்தான் நாம் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் இந்த வழிபாட்டை செய்வதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. முகம் கை கால்களை மட்டும் கழுவி விட்டு நாம் இந்த வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை செய்யும் பொழுது பூஜை அறையில் அமர்ந்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் செய்யலாம். நம் ஒவ்வொருவருடைய கையிலும் குரு மேடு என்று ஒன்று இருக்கும். அது நம்முடைய ஆள்காட்டி விரலுக்கு கீழ் இருக்கக்கூடிய மேடைதான். அந்த குரு மேட்டில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை நன்றாக தடவி குரு பகவானை மனதார வழிபாடு செய்யும் பொழுது குருவின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இன்னும் கூடுதல் பலனை பெற வேண்டும் என்றால் குருவின் குறியீட்டை குரு மேட்டில் வரைந்து அதற்கு மேல் மஞ்சளை தடவும் பொழுது இன்னும் அதீத பலன் உண்டாகும். இந்த மஞ்சளை தடவி விட்டு குருவை நாம் வழிபாடு செய்யும்பொழுது நேர்மறையான வேண்டுதல்களை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: புடவை கட்டும் முறை
குருவருள் என்பது சாதாரணமாக அனைவருக்கும் கிடைத்து விடாது. அப்படிப்பட்ட குருவருளை மிகவும் எளிமையாக பெறுவதற்கு குரு புஷ்ய யோகம் வரக்கூடிய நாளில் முழு மனதோடு குருவை வழிபாடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.