புடவை என்பது நம் தமிழ் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அது ஒரு கலாச்சாரம் சார்ந்த உடையாக மட்டுமல்லாமல் மிகுந்த பாதுகாப்பும், சௌகரியமும் கொண்டதாக இருக்கிறது. அழகும், நேர்த்தியும் கொண்ட இந்த புடவை பெண்கள் எப்படி கட்டினால் அவர்கள் கையில் பணம் புரளும்? என்பதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
தழைய தழைய புடவை கட்டிக் கொண்டாலும் சாஸ்திரங்களின்படி ஒரு பெண் அவளுடைய கால்களில் அணிந்து கொண்டிருக்கும் தண்டையும், மிஞ்சியும் அதாவது கொலுசும், மெட்டியும் தெரியும்படி புடவை கட்டிக் கொண்டிருக்க வேண்டும். புடவை தரையில் புரளும் படி கட்டினால் தடுக்கி விழ நேர்ந்திடும். மண்ணிலும், அழுக்கிலும் புடவை அதிகம் படக்கூடாது. அதனால் தான் புடவையை பழங்கால தமிழர்கள் நன்கு தூக்கி கட்டி இருப்பார்கள் பார்த்ததுண்டா?
புடவை கட்டுவது தமிழ் மரபு மட்டுமல்லாமல், எப்பேர்ப்பட்ட பெண்ணையும் வெட்கம் கொள்ள செய்யும் அதிர்ஷ்டமான உடையாகும். புடவை அணிந்து கொள்ளும் பெண்களின் கையில் எப்பொழுதும் பணம் புரளுவதாக ஒரு நம்பிக்கை உண்டு. அதுவும் தனக்குரிய நேர்த்தியுடன், இடுப்பு மடிப்பு தெரியாமல், பின்னங்கால் கொலுசில் புடவையின் ஜரிகை மாட்டிக் கொள்ளாமல், பூமியில் புடவை புரளாமல் அழகாக கட்டிக் கொண்டிருக்கும் பெண்களிடம் மகாலட்சுமி வேண்டாம் என்றாலும், ஓடோடி வந்து விடுகிறாள்.
திருமணமான பெண்களின் காலில் அணிந்திருக்கும் மெட்டி தெரியும் படி புடவை அணிய வேண்டும். தழைய தழைய கட்டுவது என்பது புடவையின் நீளம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கும். புடவையின் நீளம் அதிகமாக இருக்கும் பொழுது, முன் பகுதியில் புடவையின் மடிப்புகள் அதிகமாக தழைய கட்டும்படி நிறைய கிடைக்கும். இப்படிப்பட்ட புடைவைகளை பெண்கள் அணிந்து கொண்டு தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வந்தால், மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கும், இதனால் பணமும் அவர்களுடைய கையில் அதிகம் புரளும் என்பது நம்பிக்கை.
பருத்தி மற்றும் பட்டு இழைகளைக் கொண்ட புடவைகளை அதிகம் கட்டுங்கள். பெண்கள் இவ்வகையான புடவைகளை கட்டுவதன் மூலம் நேர்மறையான ஆற்றல்களை அதிகரித்துக் கொள்கிறார்கள். புடவை பாரம்பரிய உடை மட்டுமல்லாமல், அதில் இருக்கும் சௌகரியமான காற்றோட்டமும், மென்மையும் பெண்மைக்கு எப்போதும் பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. பலவிதமான சரும நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது. பெண்கள் புடவை கட்டும் பொழுது அசவுகரியமாக அல்லது கவர்ச்சியூட்டும் படி கட்டக்கூடாது. இது எதிர்மறை எண்ணங்களையும், எதிர்மறையான விஷயங்களையும் நம்மிடம் கொண்டு வரக்கூடிய தவறான செயலாகும். நேர்மறை எண்ணங்கள் பிரதிபலிக்க ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும், சுத்தமாகவும் புடவையை அணிய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
கொண்டைக்கடலை அடை செய்முறை
மங்களகரமாக புடவை அணியும் பெண்களிடத்தில் தைரியமும், தன்னம்பிக்கையும், மகாலட்சுமியின் அருளும், பணமும் அதிகமாக இருக்கும். யாராவது ஒருவர் புடவை கொடுக்கும் பொழுது, அதை வேண்டாம் என்று மறுக்கக்கூடாது. தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுக்கப்படும் புடவைகள், பெரும் மதிப்பிற்கு உரியது. இதனை அலட்சியமாக வேண்டாம் என்று சொல்லக்கூடாது. புடவை தானம் செய்பவர்கள் இல்லத்தில், சுபிட்சம் எப்போதும் இருக்கும். வருடம் ஒரு முறையாவது புடவை தானம் செய்யுங்கள். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு புடவை வைத்து பூஜை செய்பவர்கள், அதை யாருக்காவது தானம் செய்யுங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களுக்கு புடவை தானம் செய்வது செல்வத்தை சேர்க்கும் சிறந்த தானம் ஆகும்.