இந்த ஒரு குருமா போதும், காலை மதியம் என இருவேளைக்கும் சுவையாக, திருப்தியாக சாப்பிடலாம்

kuzhambu
- Advertisement -

ஒரு 10, 15 வருடங்களுக்கு முன்னர் பெரும்பாலானோர் மூன்று வேளையும் உண்ணும் உணவு சாதம் மற்றும் குழம்பாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தோமென்றால் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என்று மூன்று வேளையும் வித்தியாசமான உணவுகளை சமைக்க வேண்டி உள்ளது. இதனால் பெண்களுக்கு வேலை அதிகமாகவே இருக்கிறது. பெண்களின் வேலையை சற்று குறைக்க இந்த கொண்டைக்கடலை குருமாவை காலையில் வைத்துவிட்டால் காலை உணவு மற்றும் மதிய உணவிற்கும் சேர்த்து சாப்பிடலாம்.

kuzhambu

கொண்டைக்கடலை குழம்பு வைக்க தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை – 200 கிராம், உருளைக் கிழங்கு – 200 கிராம், வெங்காயம் – 3, தக்காளி – 3, பூண்டு – 10 பல், இஞ்சி – ஒரு பெரிய துண்டு, தேங்காய் – அரை மூடி, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒன்றரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், எண்ணெய் – 25 கிராம், சோம்பு – ஒரு ஸ்பூன், கசகசா – ஒரு ஸ்பூன், பட்டை – இரண்டு சிறிய துண்டு, பிரிஞ்சி இலை – 2, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, உப்பு –தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்திருக்க வேண்டும். முதலில் ஊற வைத்த கொண்டக்கடலையை ஒரு குக்கரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதனுடன் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நான்கைந்து விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

kondai kadalai

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில், துருவிய தேங்காய் இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, அரை ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து அதில் 25 கிராம் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் அனைத்தையும் சேர்க்க வேண்டும். அவை நன்றாக பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்க வேண்டும்.

vanali

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் இவற்றுடன் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா போன்ற வற்றை சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். பின்னர் அவற்றுடன் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து ஒன்றாக கிளறி விட வேண்டும். இவற்றுடன் கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீரையும் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

அதன்பின் கடாயை ஒரு மூடி போட்டு மூடி குழம்பினை 5 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவேண்டும். தேங்காய் விழுதை கலந்த பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதன் பின்னர் குழம்பினை 5 நிமிடங்கள் வேகமான தீயில் கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக கொதிக்கும் பொழுது கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கு நன்றாக சேர்ந்து குழம்பின் சுவையை அதிகரிக்கும். அதன்பின் குழம்பினை திறந்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விட வேண்டும்.

kuzhambu

இந்த குழம்பினை இட்லி, தோசை, ஆப்பம் போன்ற காலை உணவு வகைகளுக்கும், மதியம் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம். எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் இந்த கொண்டைக்கடலை குருமாவின் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த கொண்டைகடலை குருமாவை ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள் உங்களுக்கு புரியும்.

- Advertisement -