நம் தூக்கத்தை குலைக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றுதான் கொசு. இந்த கொசுவால் பல நோய்கள் பரவுகின்றன என்பது நமக்கு நன்றாக தெரியும். அதுவும் மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம். மாலை நேரத்தில் சிறிது கதவை திறந்து வைத்தாலும் கூட வீடு முழுவதும் கொசுக்கள் வந்து அடைந்து விடும். இப்படிப்பட்ட கொசுக்களை வீட்டிலிருந்து விரட்டுவதற்கும் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் செய்யக்கூடிய எளிய முறைகளை பற்றி தான் இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக கொசுக்கள் வீட்டில் இருக்கும் துணிகளில் அதிகமாக இருக்கும். நாம் துணிகள் இருக்கும் இடத்தில் கை வைத்து தட்டினாலேயே அதிலிருந்து பத்து பதினைந்து கொசுக்கள் பறந்து ஓடும். அதேபோல் அழுக்கு துணிகளிலும் இந்த கொசுக்கள் இருக்கும். நாம் அழுக்குத் துணிகளை முறையாக திறந்து போடாமல் மூடி வைத்தோம் என்றால் கொசுக்கள் வந்து அடைவதை நம்மால் தவிர்க்க முடியும்.
அதே போல் மாலை நேரத்தில் ஐந்தரை மணி ஆன உடனேயே ஜன்னல் கதவுகளை நம் மூடி வைத்தோம் என்றால் கொசுக்கள் வீட்டிற்குள் வருவதையும் நம்மால் குறைக்க முடியும். கொசுக்கள் வீட்டிற்குள் வந்து விட்டது, இப்பொழுது என்ன செய்யலாம்?
இதற்கு ஒரு டீ கப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் பூஜை அறையில் சாம்பிராணி போடுவோம் அல்லவா அந்த கப்பு சாம்பிராணியை பொருத்தி வைத்துக் கொள்ளுங்கள். கப்பு சாம்பிராணி நன்றாக கங்கு பிடித்து புகைய ஆரம்பித்த பிறகு அதற்கு மேல் நாம் பச்சையாக இருக்கும் வேப்பிலைகளை வைக்கலாம்.
இதன் வாடைக்கு கொசுக்கள் ஓடிவிடும். அதேபோல் பூண்டு தோலை சேகரித்து வைத்து அதில் லேசாக தண்ணீரை தெளித்து ஈரமாக்கிய பிறகு அந்த சாம்பிராணியின் மேல் வைத்து பூண்டு புகை போட்டாலும் வீட்டில் இருக்கக்கூடிய கொசுக்கள் அனைத்தும் ஓடிவிடும்.
சரி வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை விரட்டலாம். ஆனால் வெளியில் இருக்கும் கொசுக்களை? நாம் வெளியில் செல்லும்போது கடிக்கும் அல்லவா? என்ன செய்யலாம்?
அதற்கு 50 ml தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 10 சொட்டு அளவு யூக்கோலிப்டஸ் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக லெமன் கிராஸ் ஆயில் 10 சொட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு இந்த எண்ணெயை நம் கை கால்களில் தேய்த்தோம் என்றால் இந்த எண்ணெயில் இருக்கும் வாடைக்கு கொசுக்கள் நம்மிடம் வராது. இந்த எண்ணையை சிறு பிள்ளைகளுக்கும் தேய்த்து விடலாம். இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.
இதையும் படிக்கலாமே: பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை வீணாக்காமல் சாம்பிராணி தயாரிக்கும் முறை
கெமிக்கல்கள் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் இருக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டி கொசுக்களால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து தப்பித்து நிம்மதியுடன் இருக்கலாம்.