நாவூரும் சுவையில் இன்ஸ்டன்ட் கொத்தமல்லி தொக்கு இப்படி ஒரு முறை செஞ்சு வச்சுக்கோங்க! சுட சுட சாதத்துக்கும், இட்லி தோசைக்கு செம காம்பினேஷன்.

kothamalli-thokku0
- Advertisement -

இன்ஸ்டன்ட் ஆக கொத்தமல்லியை வைத்து இப்படி ஒரு தொக்கு நீங்கள் செய்து வைத்துக் கொண்டால் சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் திடீரென எதுவும் இல்லாத போது தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்! சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும் இந்த இன்ஸ்டன்ட் கொத்தமல்லி தொக்கு வீட்டில் எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கொத்தமல்லி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – ஒரு கட்டு, வர மிளகாய் – 10, புளி – சிறு நெல்லிக்காய் அளவு, பூண்டு – 10 பற்கள், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு கப், உளுத்தம் பருப்பு – ஒரு கப்.

- Advertisement -

கொத்தமல்லி தொக்கு செய்முறை விளக்கம்:
கொத்தமல்லி தொக்கு செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை கொத்தமல்லியை ஒரு கட்டை பிரித்து நன்கு கழுவி சுத்தம் செய்து இலை இருக்கும் பகுதி வரை காம்பை நறுக்கி எடுத்து விடுங்கள். பின்னர் தண்ணீரை உதறி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை கொத்தமல்லியை போட்டு லேசாக வதக்கி விடுங்கள். மல்லி சுருள வதங்கியதும், அதை தனியாக எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வர மிளகாய் சேர்த்து உப்பி வர லேசாக வறுத்துக் கொள்ளுங்கள், கருகி விடக்கூடாது கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பின்னர் இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார்கள் எல்லாம் நீக்கி உருட்டி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதே எண்ணெயில் வதக்கி இதனுடன் தேவையான அளவிற்கு பெருங்காயத்தை கட்டியாகவோ அல்லது தூளாகவோ சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நீங்கள் மல்லியை தவிர எண்ணெயில் வதக்கிய மற்ற எல்லா பொருட்களையும் சேர்க்க வேண்டும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பூண்டு பற்களையும் தோல் உரித்து சேருங்கள். பின்னர் இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரவென்று பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் மல்லியையும் சேர்த்து ஒருமுறை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு வாயகன்ற தட்டில் போட்டு உலர வைத்துக் கொள்ளுங்கள். நன்கு உலர்ந்து ஈரப்பதம் இல்லாமல் ஆனதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சுவையான இந்த கொத்தமல்லி தொக்கு சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி இன்ஸ்டன்ட் கொத்தமல்லி தொக்கு செஞ்சு எல்லாரையும் அசத்திடுங்க!

- Advertisement -