ஒருவருக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவருடைய குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும் பட்சத்தில் அந்த ஆயிரம் பிரச்சனைகளும் ஒன்றும் இல்லாமல் போய்விடும். அதே சமயம் ஒருவருக்கு வெளியே ஆயிரம் வழியில் சந்தோஷம் இருந்தாலும் வீட்டிற்குள் ஒற்றுமையோ மகிழ்ச்சியோ இல்லை என்றால் அவை அனைத்துமே தவிடு பொடியாகிவிடும். அந்த அளவிற்கு குடும்பத்தின் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த குடும்ப ஒற்றுமையை அதிகப்படுத்தவும் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கவும் செய்ய வேண்டிய ஒரு வழிப்பாடாக தான் கேதார கௌரி நோன்பு திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கேதார கௌரி விரதம்
கணவன் தன்னுள் சரி பாதியை மனைவிக்கு தர வேண்டும் என்றும் மனைவி தன்னுள் சரி பாதியை கணவனுக்கு தர வேண்டும் என்றும் தங்களுக்குள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் சரிசமமாக பாவித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சிவனும் பார்வதியும் அர்த்தனாரீஸ்வரர் அவதாரம் எடுத்தார்கள் என்றும் அந்த அர்த்தநாரீஸ்வர அவதாரத்தை குறிக்கும் விதமாக தான் கேதார கௌரி நோன்பு திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கேதார கௌரி விரதத்தை மிகவும் எளிமையான முறையில் அதேசமயம் அதிசக்தி வாய்ந்த பலனை பெரும் வழிமுறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த வருடம் கேதார கௌரி விரதம் அக்டோபர் மாதம் 20ம் தேதி மதியம் 1:45 மணியிலிருந்து 2:45 மணிக்குள் தொடங்க வேண்டும். நிறைவு செய்யக்கூடிய நாளாக அக்டோபர் மாதம் 21ஆம் தேதி மாலை 4:45 வயதினில் இருந்து 5:45 மணி திகழ்கிறது. ஒரு சிலர் 21 ஆம் தேதி காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து விரதத்தை ஆரம்பித்து அன்று மாலையே இந்த விரதத்தை பூர்த்தி செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள்.
விரதத்தை நிறைவு செய்யக்கூடிய நேரமான மாலை 4:45 மணியிலிருந்து 5:45 மணிக்குள் நாம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் லிங்கம், படம், சிலை போன்றவற்றை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து அவருக்கு முன்பாக 21 அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு திசை பார்த்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதில் முதலில் வெற்றிலை பாக்கை வைக்க வேண்டும். அந்த வெற்றிலையில் மஞ்சளால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரை வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய், வாழைப்பழம், கேதார கௌரி நோன்பிற்காக தயார் செய்த பலகாரங்கள் போன்றவற்றை வைக்க வேண்டும். அப்படி பலகாரத்தை வைக்கும் போது ஒவ்வொரு பலகாரத்தையும் 21 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். இந்த பலகாரத்தில் அதிரசம் கண்டிப்பான முறையில் இடம்பெற வேண்டும். அதேபோல் தங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஆண் பெண் என்று அனைவருக்கும் மஞ்சள் கயிறை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மஞ்சள் கயிறிலும் 21 முடிச்சுகளை போட்டு தயார் செய்து வைத்து அதையும் அந்த வாழை இலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது நமக்கு தெரிந்த சிவபெருமானின் மந்திரம் அல்லது பாடல்களை பாட வேண்டும். இதோடு “ஓம் அர்த்தநாரிஸ்வராய நமோ நம” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். மறுநாள் காலையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த நோன்பு கயிறை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். இப்படி அர்த்தநாரீஸ்வரை கேதார கௌரி நோன்பு நாளில் வழிபாடு செய்வதன் மூலம் குடும்பத்தில் எந்தவித சண்டை சச்சரவுகளும் ஏற்படாமல் ஒற்றுமையுடன் திகழ்வதோடு தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாக்கும்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி கடைசி நாள் வழிபாடு
சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்து இருக்கக்கூடிய இந்த அற்புதமான விரதத்தை குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து பெண்களும் பின்பற்றி குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷத்தையும் நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.