பொதுவாக காய்கறிகள் என்றாலே அதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக நாட்டு காய்கறிகள் என்பது அதிக அளவில் நம் ஊரில் விளையக்கூடிய காய்கறிகளாகவும் அதேசமயம் அதில் அதிக அளவு சத்துக்களும் நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்ட நாட்டு காய்கறிகளில் ஒன்றான கொத்தவரங்காயை வைத்து எப்படி கிரேவி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
கொத்தவரங்காயில் புரதம், விட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. கால்சியம் மற்றும் விட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது எலும்புகளுக்கும், நரம்புகளுக்கும் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் கண் பார்வையை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் மிகுந்ததாகவும் திகழ்கிறது.
தேவையான பொருட்கள்
- கொத்தவரங்காய் – 1/4 கிலோ
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 6 பல்
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 2 இனுக்கு
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – 1 டம்ளர்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் கொத்தவரங்காயை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வேர்க்கடலை, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தேங்காய் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம், கடுகு இரண்டையும் சேர்க்க வேண்டும். பிறகு அதில் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். கடுகு நன்றாக வெடித்த பிறகு இதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் லேசாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கருவேப்பிலையும் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் இதனுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தவரங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியை இதில் சேர்த்து இதனுடன் மல்லித் தூளையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.
மூன்று விசில் வந்ததும் குக்கரை அணைத்துவிட்டு விசில் போனதும் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் இல்லை என்றால் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து இதனுடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட வேண்டும். மிகவும் சுவையான கொத்தவரங்காய் கிரேவி தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: செவ்வாழை குழிப்பணியாரம் செய்முறை
நம்முடைய உணவில் கொத்தவரங்காயை நாம் அதிக அளவில் சேர்ப்பதில்லை. ஆனால் இந்த கொத்தவரங்காயில் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இந்த முறையில் கிரேவி செய்து கொடுத்து அந்த சத்துக்களின் பலனை பெறுவோம்.