அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் சிறப்புக்கள்

நமது புராணங்கள் பலவற்றிலும் ஆன்மீகத்தில் உயர்நிலை அடைந்த ஞானிகள், ரிஷிகள் சாமானிய நிலையிலிருக்கும் மனிதர்களின் வாழ்வு மேம்பட உதவிய நிகழ்வுகள் பலவற்றை அறிந்திருப்போம். அதே நேரத்தில் அம்முனிவர்களின் சாபம் பெற்று வாழ்வில் பல சங்கடங்களை அனுபவித்தவர்கள் பற்றியும் படித்திருப்போம். அப்படி முனிவரால் சாபம் பெற்ற ஒரு மன்னன் சாபத்தை இறைவனே மனித ரூபத்தில் வந்து போக்கிய கோவிலடி அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் பற்றியும், அதன் சிறப்புக்கள் குறித்தும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

Perumal

அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் வரலாறு

சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாக கோவிலடி அருள்மிகு அப்பக்குடத்தான் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான பெருமாளின் மூலவர் அப்பக்குடத்தான் என்றும், உற்சவர் அப்பால ரங்கநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். தாயார் இந்திரா தேவி, கமல வல்லி என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் முற்பட்ட கோயிலாக இருக்கிறது கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில். ஆழ்வார்களில் நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயிலாக இது இருக்கிறது. 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்று. புராண காலங்களில் கோவிலடி எனும் இந்த ஊர் “திருப்பேர்” என அழைக்கப்பட்டது.

கோயில் புராணப்படி உபமன்யு என்கிற அரசன் துர்வாச முனிவரிடம் சாபம் பெற்று தனது அனைத்து செல்வங்களையும் இழந்தான். இதனால் மனம் கலங்கிய உபமன்யு துர்வாசரிடம் தன்னை மன்னித்து தனக்கு சாப விமோச்சனம் அளிக்கும் படி கெஞ்சினான். இதனால் மனமாறிய துர்வாச முனிவர் பலசவனம் எனும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்தால் உனது சாபம் நீங்கும் என கூறி சென்றார். அவர் கூறிய படியே உபமன்யு இத்தலத்தில் அரண்மனை நிர்மாணித்து தினந்தோறும் அன்னதானம் அளித்து வந்தான்

ஒரு நாள் பெருமாளே ஒரு ஏழை அந்தணர் வடிவில் உபமன்யுவின் அன்னதான பந்தலுக்கு வந்து உணவருந்தினர். உபமன்யுவின் விருந்தோம்பல் குணத்தை சோதிக்க எண்ணிய பெருமாள் அனைத்து உணவுகளையும் அவர் ஒருவரே தின்று முடித்தார். இதை கண்டு அதிசயித்த போதிலும், அந்த அந்தண பெரியவரிடம் உபமன்யு வேறேதாவது வேண்டுமா என கேட்க, அவரும் தனது பசி அடங்க அப்பம் செய்து கொண்டுவருமாறு கூறினார்.

- Advertisement -

அப்பங்கள் தயாரிக்கப்பட்டு, அந்த அப்பங்கள் நிறைந்த குடத்தை அந்தணர் வடிவிலிருந்த பெருமாளிடம் கொடுத்த போது உபமன்யுவின் சாபம் நீங்கி மீண்டும் தனது செல்வங்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்றான். அப்பக்குடத்தை இத்தலத்தில் பெற்றதால் இந்த இறைவனுக்கு அப்பக்குடத்தான் என்கிற பெயர் உண்டானது.
திருமால் ரங்கநாதர் வடிவில் இருக்கும் ஸ்ரீரங்கபட்டணம், ஸ்ரீரங்கம், கும்பகோணம், திருஇந்தளூர் ஆகியவற்றோடு இந்த கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலும் சேர்ந்து “பஞ்சரங்க” தலங்களாக விளங்குகிறது.

அப்பக்குடத்தான் கோயில் சிறப்புக்கள்

12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இறுதியாக இந்த கோயிலின் இறைவனை மங்களாசாசனம் செய்து, தனது பூத உடலை நீத்த பின்பு நேரே திருமாலின் வைகுண்ட லோகத்திற்கு சென்றார் என்பது ஐதீகம். எனவே இங்கு வந்து பெருமாளை வழிபடுபவர்களுக்கு மரண பயங்கள் நீங்கி, இறுதி காலத்திற்கு பின்பு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். பெருமாள் உபமன்யுவின் சாபம் போக்கிய தலம் என்பதால் பரம்பரை சாபம், குடும்ப சாபம் போன்றவை இருப்பவர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபடுவதால் சாப நிவர்த்தி உண்டாகிறது. குழந்தை வரம் வேண்டுவோர்களுக்கு பெருமாள் பிள்ளை வரத்தை தந்தருள்கிறார். தங்களின் வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கோவிலடி என்கிற ஊரில் அமைந்துள்ளது. இங்கு செல்ல தஞ்சை நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்
கோவிலடி
தஞ்சாவூர் மாவட்டம் – 613105

தொலைபேசி எண்

4362 – 281488

4362 – 281460

4362 – 281304

இதையும் படிக்கலாமே:
அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Koviladi appakudathan temple details in Tamil. It is also called Appakudathan divya desam in Tamil or Koviladi appakudathan kovil in Tamil or Appakudathan perumal kovil in Tamil or Appakudathan thirukoil or Panjaranga thalam.