நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் வீட்டில் இருக்கும் நண்டு சுண்டு முதல் பெரியவர்கள் வரை எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த சண்டை காரணத்துடனும் இருக்கலாம் காரணம் இன்றியும் இருக்கலாம். அப்படிப்பட்ட சண்டைகள் உடனுக்குடனே முடிவிற்கு வந்துவிட்டால் பரவாயில்லை. நாள் கணக்காக, மாதக்கணக்காக ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு பேசாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி சண்டை சச்சரவுடன் இருக்கக்கூடிய நபர்கள் தங்களின் சண்டையை மறந்து ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு தேங்காயை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சண்டை நீங்க தேங்காய் பரிகாரம்
அனைத்து தெய்வ வழிபாட்டிலும் தேங்காய் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. எந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலும் தேங்காய் வாங்கி உடைக்கும் பழக்கம் என்பது இருக்கும். தேங்காய் மிகவும் பவித்திர தன்மை உடையது இந்த தேங்காயை வைத்து நாம் அனைத்து நல்ல காரியங்களையும் செய்வது போலவே நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களையும் நீக்க முடியும். அமாவாசை தினங்களில் தேங்காயை வைத்து திருஷ்டி சுத்தி உடைக்கும் வழக்கம் இருக்கும். அந்த வகையில் வீட்டில் இருக்கக்கூடிய சண்டைகள் நீங்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். இதற்கு நல்ல தேங்காயாக பார்த்து ஒரு தேங்காயை வியாழக்கிழமை அன்றே வாங்கிக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து அது முழுக்க மஞ்சளை தடவி அதை சுற்றி மூன்று இடத்தில் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காயை அப்படியே உங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
மறுநாள் காலை அதாவது வெள்ளிக்கிழமை காலை எப்பொழுதும் போல் வீட்டில் விளக்கேற்றி பூஜையெல்லாம் செய்வோம் அல்லவா? அப்படி செய்து முடித்துவிட்டு இந்த தேங்காயை உடைக்க வேண்டும். உடைத்த தேங்காயை உங்களுடைய நிலை வாசலின் வெளிப்புறத்தில் இரண்டு புறங்களிலும் வைக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் இந்த தேங்காய் அப்படியே இருக்கட்டும்.
இந்த தேங்காயை மாலை ஐந்து முப்பது மணி போல அதாவது நீங்கள் மாலை நேரத்தில் விளக்கேற்றுவீர்கள் அல்லவா? அதற்கு முன்பாக இந்த தேங்காயை எடுத்துக்கொண்டு உங்கள் தலையை மூன்று முறை சுத்தி கால் படாத ஏதாவது ஒரு இடத்தில் போட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து முகம் கைகள் கால்களை கழுவிக்கொள்ள வேண்டும். பிறகுதான் வீட்டிற்குள் வரவேண்டும்.
வீட்டிற்குள் வந்த பிறகு விளக்கேற்றி வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். இப்படி சாம்பிராணி தூபம் போடும் பொழுது அந்த சாம்பிராணி தூபத்தில் வெண்கடுகையும் சேர்த்து வீடு முழுவதும் புகை போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். அதனால் வீட்டில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் எதுவும் ஏற்படாது. ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே வேண்டுதல் நிறைவேற வேல் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த தேங்காய் பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழலாம்.