மற்ற தெய்வங்களை வழிபடுவதை விட குலதெய்வத்தை நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்காக மற்ற தெய்வங்களை வழிபடக் கூடாதா என்று கேட்டால் அப்படி கிடையாது நம்முடைய குலத்தை காக்கக்கூடிய முன்னோர்களை தான் நாம் குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்கிறோம்.
அப்படிப்பட்ட குல தெய்வத்தை நாம் வழிபடுவதன் மூலமே மற்ற பிற தெய்வங்களின் அருளையும் நம்மால் பெற முடியும். குலதெய்வ வழிபாடு தவிர்த்துவிட்டு மற்ற தெய்வ வழிபாட்டை நாம் செய்தாலும் நமக்கு அதனால் எந்த பலனும் இருக்காது. அப்படிப்பட்ட குலதெய்வத்தை எந்த முறையில் நாம் வழிபட்டால் நாம் வைத்த வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரார்த்தனை நிறைவேற குலதெய்வ வழிபாடு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குலதெய்வங்கள் இருக்கும். அந்த குலமே அந்த தெய்வத்தை தான் வழிபாடு செய்வார்கள். அதே போல் ஒவ்வொரு குலதெய்வத்திற்கும் வழிபாட்டு முறைகள் என்பது வேறுபடும். அந்த வழிபாட்டு முறைகளை தொடர்ச்சியாக மாதத்திற்கு ஒரு முறையோ வருடத்திற்கு ஒரு முறையோ அந்த குலதெய்வத்தை மறவாமல் குலதெய்வத்தின் ஆலயத்திற்கு சென்று அந்த வழிபாடுகளையும் பூஜைகளையும் செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இது பொதுவாக குலதெய்வத்தை வழிபடும் முறை. இதே நமக்கு ஏதாவது ஒரு வேண்டுதல் இருக்கிறது. அந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும். நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறோம். அது நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. திருமண முயற்சிகள், குழந்தை பாக்கியம், படிப்பிற்கேற்ற வேலை என்று எப்பேர்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
இது மிகவும் சுலபமான ஒரு பரிகாரமாக தான் கருதப்படுகிறது. உங்களுடைய குலதெய்வத்திற்கு உகந்த கிழமையாக ஒரு கிழமை இருக்கும். அந்தக் கிழமையை தேர்வு செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லாத பட்சத்தில் ஆண் குலதெய்வமாக இருந்தால் அமாவாசை தினங்களிலும் பெண் குலதெய்வமாக இருந்தால் பௌர்ணமி தினங்களிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் தான் வேண்டும். ஒன்று மஞ்சள் துணி மற்றொன்று காணிக்கை. ஒரு வெள்ளை துணியை எடுத்து அதை சுத்தமாக துவைத்து நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சள் மற்றும் பன்னீரை நன்றாக கலந்து அதற்குள் அந்த வெள்ளைத் துணியை வைத்து நன்றாக ஊற வைத்து பிறகு அதை காயவைத்து மஞ்சள் துணியாக மாற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுது மஞ்சள் துணி தயாராகி விட்டது.
அடுத்தது ஒரு ரூபாய், பதினோரு ரூபாய், 21 ரூபாய், 51 ரூபாய், 101 ரூபாய் என்று உங்களால் எவ்வளவு காணிக்கையை குலதெய்வத்திற்கு எடுத்து வைக்க முடியுமோ அந்த காணிக்கையை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய தீபங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களுடைய குலதெய்வத்தை மனதார வழிபாடு செய்து கொள்ளுங்கள். பிறகு தயார் செய்து வைத்திருக்கும் மஞ்சள் துணியில் குலதெய்வத்திற்காக எவ்வளவு காணிக்கை எடுத்து வைத்திருக்கிறோமோ அந்த காணிக்கையை வைத்து மூட்டியாக கட்டி உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய குலதெய்வத்திடம் நீங்கள் என்ன வேண்டுதல் வைக்கிறீர்களோ அதை மனதார கூற வேண்டும்.
இவ்வாறு கூறி முடித்த பிறகு அந்த மஞ்சள் துணியை குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து விட வேண்டும். பிறகு எப்பொழுது போல் கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். இப்படி தினமும் நீங்கள் அந்த மஞ்சள் துணிக்கு வழிபாடு செய்து வர உங்களுடைய வேண்டுதல் விரைவிலயே நிறைவேறும். அப்படி வேண்டுதல் நிறைவேறிவிட்டால் அன்றைய தினமோ அல்லது மறுநாளோ அந்த காணிக்கை எடுத்துக் கொண்டு போய் உங்கள் குலதெய்வத்தின் ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:ஆடி மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
மிகவும் எளிமையான காணிக்கை பரிகாரமாக தான் இது திகழ்கிறது. இது அன்றைய காலத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் செய்து வந்த வேண்டுதல்தான். இதை மறவாமல் நாமும் பின்பற்றினால் நம்முடைய வேண்டுதலையும் நம் குலதெய்வம் நிறைவேற்றும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.