இந்த 4 பொருள் இருந்தாலே போதும்! வீட்டிலேயே ஆரோக்கியமான ‘ஜில் ஜில் குல்ஃபி’ செய்து சாப்பிடலாமே!

kulfi-ice

குல்ஃபி ஐஸ் யாருக்கு தான் பிடிக்காது? சிறு வயதில் அதிகம் விரும்பி சாப்பிட்ட ஐஸ் வகைகளில் குல்ஃபியும் ஒன்றாக இருந்திருக்கும். மற்ற ஐஸ் வகைகளை விட குல்ஃபி ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பாலாகும். கெட்டியான பாலை கொண்டு செய்யப்படும் குல்ஃபி ஐஸ் நம் வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும்? இந்த 4 பொருட்கள் இருந்தாலே போதும்! சுவையான ஆரோக்கியம் மிகுந்த குல்ஃபி ஐஸ் தயார் செய்யலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kulfi

குல்ஃபி ஐஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – அரை லிட்டர்
பாதாம் – 20
முந்திரி – 15, ஏலக்காய் – 6, கண்டன்ஸ்டு மில்க் – கால் கப், சர்க்கரை – அரை கப்

குல்ஃபி ஐஸ் செய்முறை விளக்கம்:
குல்ஃபி ஐஸ் செய்வதற்கு நட்ஸ் வகைகளை முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் பாதாம், முந்திரி, பிஸ்தா எதை வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். உங்களிடம் இருக்கும் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நட்ஸ் வகைகளை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்கு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

milk

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் அடிகனமான பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் அரை லிட்டர் பால் சேர்த்து சுண்டக் காய்ச்சிக் கொள்ளுங்கள். பால் சுண்ட சுண்ட அடி பிடிக்கும் என்பதால் தொடர்ந்து இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். நன்கு கொதித்து வந்ததும் அதனுடன் தேவையான அளவிற்கு கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கலாம். கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கும் பொழுது கூடுதல் சுவையுடனும், கெட்டியாகவும் இருக்கும். கண்டன்ஸ்டு மில்க் இல்லை என்றாலும் பரவாயில்லை. அதனைத் தவிர்த்து விட்டு தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பால் கெட்டியாக தேவை என்றால் மட்டும் கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன் கரைத்து ஊற்றிக் கொள்ளலாம். பால் நன்கு சுண்டி வரும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள நட்ஸ் வகைகளை சேர்த்து நன்கு கிண்ட வேண்டும். பால் அடிபிடிக்காமல் கொஞ்சம் கெட்டியாக சுண்டி வரவும் அடுப்பை அணைத்து விட்டு ஆற விடுங்கள்.

kulfi1

வெறும் பால், சர்க்கரை, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை கொண்டு மட்டுமே குல்ஃபி ஐஸ் தயார் செய்து விடலாம். ஆனால் கூடுதல் சுவைக்காக கண்டன்ஸ்டு மில்க், முந்திரி, பிஸ்தா, கான்பிளவர் மாவு, குங்குமப்பூ சேர்ப்பது உண்டு. அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதலாக இந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். பால் நன்கு ஆறியதும் குல்ஃபி மோல்ட் வைத்திருந்தால் அதில் ஊற்றிக் கொள்ளலாம். அப்படி உங்களிடம் குல்பி மோல்ட் இல்லை என்றால் டம்ளர்களில் ஊற்றி ஸ்பூன் பின்புறம் அல்லது ஐஸ் குச்சியை சொருகி கொள்ளுங்கள்.

kulfi2

உங்கள் ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் ஒரு எட்டு மணி நேரம் அப்படியே வைத்திருங்கள். எட்டு மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் குல்ஃபி ஐஸ் ஆரோக்கியமாகவும், சுவையாகவும் தயாராகி இருக்கும். டம்ளரை சிறிது நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் போதும் அழகாக ஐஸ் பிரிந்து வெளியில் வந்து விடும். இந்த வெயில் காலத்தில் எங்கும் செல்லாமல் நம் வீட்டிலேயே நமக்கு பிடித்த ஜில் ஜில் குல்ஃபி ஐஸ் எளிமையாக செய்து மகிழலாம்.