கும்பகோணம் கடப்பா! எப்படி செய்யறதுன்னு இன்னைக்கு தெரிஞ்சுக்கலாமா? இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, எல்லாத்துக்கும் ஒரு சூப்பர் சைட் டிஷ் இது.

kumbakonam-kadapa4

சாம்பார், சட்னி, குருமா எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு இன்றைக்கோ, நாளைக்கோ உங்கள் வீட்டில் இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக இந்த கும்பகோணம் கடப்பா வைத்துப் பாருங்கள். ஒரு வித்தியாசமான சுவையில், வித்தியாசமான ஆரோக்கியமான சுலபமான சைட்டிஷ் தான் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த கும்பகோணம் கடப்பா நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி செய்யலாம் என்று பார்த்துவிடலாமா?

pasi-parupu

Step 1:
முதலில் 1/2 கப் அளவு பாசிப் பருப்பை எடுத்து கடாயில் போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு அதை 3 முறை நன்றாக கழுவி, தண்ணீரை வடிகட்டி விட வேண்டும். ஒரு குக்கரில் தயாராக இருக்கும் பாசிப்பருப்பை சேர்த்து, எந்த அளவு பாசிப்பருப்பு எடுத்தீர்களோ, அதே அளவில் 3 மடங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிய அளவிலான இரண்டு உருளைக்கிழங்குகளை, தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். குக்கரில் விசில் போட்டு, 3 விசில் வைத்தால் போதுமானது. பாசிப்பருப்பும் உருளைக்கிழங்கும் நன்றாக வெந்திருக்கும்.

இது வெந்து தயாரான பின்பு, ஒரு மத்தை வைத்து உருளைக்கிழங்கை லேசாக நசுக்கி விட்டுக் கொள்ளுங்கள். ரொம்பவும் குழைத்து விடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இது அப்படியே இருக்கட்டும்.

kumbakonam-kadapa

Step 2:
அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு 1 கப் அளவு தேங்காய் துருவல், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 – ஸ்பூன், பச்சைமிளகாய் – 5 லிருந்து 6, இஞ்சி ஒரு சிறிய துண்டு, பூண்டு 2 பல், முந்திரிபருப்பு – 4, இவைகளை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து விட வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 3:
இப்போது ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1/2 ஸ்பூன், பட்டை – 1, லவங்கம் – 1, பிரியாணி இலை – 1, நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், இவைகளை சேர்த்து வதக்கி விட்டு, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் சேர்த்து, ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

kumbakonam-kadapa1

அடுத்தப்படியாக, வேகவைத்திருக்கும் உருளைக்கிழங்கு, பாசிப்பருப்பு கலவையை சேர்க்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதிக்க விட வேண்டும். இதில் சேர்த்திருக்கும் பாசிப்பருப்பு, தேங்காய் எல்லாம் குழம்பை கெட்டித்தன்மைக்கு கொண்டுவரும். ஆகையால் தண்ணீரை கொஞ்சம் அதிகமாக விட வேண்டும். அதாவது குழம்பு பதம் வரும் வரை.

kumbakonam-kadapa3

அவ்வளவு தான். ஒரு மூடியைப் போட்டு மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை பச்சை வாடை போகும் அளவிற்கு கொதிக்க விடவேண்டும். சுடச்சுட இட்லி தோசையுடன், கொஞ்சம் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம். இந்த குறிப்பை உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

இதையும் படிக்கலாமே
சுவையான பூண்டு சாதம் செய்வது இவ்வளவு ஈஸியா? ஆரோக்கியமான இந்த பூண்டு சாதத்தை செய்ய வெறும் 10 நிமிடம் போதுமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.