எல்லோருக்கும் பிடித்த ‘குஸ்கா’! வீட்டிலேயே சுலபமாக, சுவையாக சமைப்பது எப்படி?

Rice

நாம் எல்லோருக்குமே குஸ்கா என்றால் மிகவும் பிடிக்கும். ரோட்டுக்கடைகளிலோ அல்லது ஹோட்டலிலோ வாங்கி சாப்பிடும் குஸ்கா பிரியாணியை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பாசுமதி அரிசி உடையாமல், உதிரி உதிரியாக வாசனையோடு, பசியைத்தூண்டும் சூப்பரான ஹோட்டல் குஸ்காவை வீட்டிலேயும் செய்ய முடியும். அதுவும் மிகவும் சுலபமான முறையில், பிரஷர் குக்கரிலேயே 20 நிமிடத்தில் செய்து முடித்துவிடலாம். இந்த குஸ்கா விற்கு சைட்டிஷாக, சுலபமான ஒரு குருமா இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும். சூப்பர் குஸ்கா + சூப்பர் குருமா எப்படி செய்வது என்பதை பற்றி பார்த்துவிடுவோமா?

kushka

குஸ்கா செய்ய தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப், எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன், பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசிப் பூ – 3, பெரிய வெங்காயம் – 3 (நீளவாக்கில் பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 4 கீனியது, பழுத்த பெரிய தக்காளி 2 – நான்கு துண்டுகளாக வெட்டியது, புதினா கொத்தமல்லி தழை – 1/2 கைப்பிடி அளவு, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன் (இஞ்சி பூண்டு விழுது அரைக்கும்போது இஞ்சியின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். பூண்டின் அளவு குறைவாக இருக்க வேண்டும். இஞ்சிக்கு, நான்கில் ஒரு பங்கு பூண்டு சேர்த்தால் மட்டும் போதும்.) தனி வர மிளகாய் தூள் – 1 டேபில் ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், புளிக்காத தயிர் – 50ml, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை பழச்சாறு – 1/2 எலுமிச்சை.

கடையிலிருந்து வாங்கும்போது பாசுமதி அரிசியை, பழைய அரிசி என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். புதிய பாசுமதி அரிசி என்றால், குழைந்துவிடும். பிரியாணி செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு பாசுமதி அரிசியை, நன்றாக மூன்று முறை கழுவி, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சரியாக பதினைந்து நிமிடம் வரை அரிசியை ஊற வைத்தால் மட்டும் போதும். குக்கரில் குஸ்கா செய்வதற்கு, 1 கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்தால், 1 1/2 கப் தண்ணீர் சரியாக இருக்கும். இந்தப்பதிவில் 2 கப் அளவு அரிசிக்கு தேவையான பொருட்கள் சொல்லப்பட்டுள்ளது.

arisi

உங்களுடைய அடுப்பில் முதலில் பிரஷர் குக்கரை வைத்து விடுங்கள். அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். அதன் பின்பாக நெய்யை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, அன்னாசிப் பூ, எல்லாவற்றையும் சேர்த்து சிவக்க வதக்குங்கள். அடுத்ததாக பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்ததாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக தக்காளி சேர்த்து, தக்காளி பச்சை வாடை போகும் வரை, வதக்கிய பின்பு புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து பத்து வினாடிகளில், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, ஒரு நிமிடம் வரை நன்றாக வதக்க வேண்டும். இந்த இடத்தில் இஞ்சி-பூண்டு பச்சை வாடை போக வேண்டும். அடுத்ததாக தனி வர மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். அடுத்ததாக கரம்மசாலா சேர்த்து 30 விநாடிகள் வதக்க வேண்டும். அடுத்ததாக புளித்த தயிரை ஊற்றி 30 வினாடிகள் எல்லாக் கலவையையும் ஒன்றாக சேர்த்து, இந்த இடத்தில் பிரியாணிக்கு தேவையான உப்பு சேர்த்து, ஒரே கிளறு, கிளறி விட்டு, இறுதியாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீரை ஊற்றிய பின்பு பாதி அளவு எலுமிச்சை பழச்சாறு, தண்ணீரில் பிழிந்து விடுங்கள்.

elumichai lemon

2 கப் அளவு அரிசிக்கு, 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதி வந்த பின்பு, ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து, ஒரு கிளறு கிளறி விட்டு, பிரஷர் குக்கரின் மூடியை போட்டு விடுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, ஒரு விசில் வைத்தால் மட்டும் போதும். அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே குஸ்கா பிரியாணி மலரட்டும். விசிலில் பிரஷர் முழுமையாக தணிந்ததும், குக்கரைத் திறந்தால், வாசமான சுவையான பிரியாணி தயாராகி இருக்கும். கரண்டியை போட்டு அப்படியே கிளறி விடக்கூடாது. ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி அரிசி உடையாமல் கிளறினால் உதிரி உதிரியான குஸ்கா தயார்.

kushka

அடுத்ததாக சுலபமான காய்கறி குருமா!

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து விடுங்கள். தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, லவங்கம், போட்டு வறுக்க வேண்டும். தேவையான அளவு பச்சைமிளகாய் சேர்த்து, வதக்க வேண்டும். அதன் பின்பாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும், வெங்காயம், தக்காளி சேர்க்க வேண்டும். அடுத்தபடியாக காய்கறி உங்கள் இஷ்டம் தான். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, இப்படி எது வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் ஒரு சேர, வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், சேர்த்து அப்படியே கொதிக்கட்டும்.

kuruma

மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தேங்காய், இஞ்சி, பூண்டு, சோம்பு, முந்திரிப்பருப்பு 4, பொட்டுக்கடலை 4 சேர்த்து விழுதாக அரைத்து, குக்கரில் கொதித்துக் கொண்டிருக்கும் காய்கறிக் கலவையோடு, தேங்காய் விழுதை, ஊற்றி விட வேண்டும். குக்கரை விசில் போட்டு விடுங்கள். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். ஒரே விசில் விட்டால் போதும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் வெஜிடபிள் குருமா ரெடி. உங்களுடைய தேவைக்கு ஏற்ப குருமாவில், சேர்க்கக் கூடிய பொருட்களை சரியான அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.