பாரம்பரிய ‘குழம்பு மிளகாய்த் தூள்’ கொஞ்சமாக அரைக்க நம்ம வீட்டு மிக்ஸியே போதுமே! 1/4 கிலோ மிளகாய் தூள் அரைக்க இனி மெஷினுக்கு போக வேண்டாம்.

- Advertisement -

பாரம்பரிய முறையில் குழம்பு மிளகாய் தூள் அரைக்க இனி மெஷினுக்கு போக வேண்டிய அவசியமில்லை. கடைகளில் விற்கும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், குழம்பு மிளகாய் தூள் என்று அனைத்தும் எந்த அளவிற்கு தரமானது என்று நமக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் இருக்கும். இப்படி நாம் நம் கைப்பட அரைத்து வைத்துக் கொண்டால் மூன்று மாதத்திற்கு நிம்மதியாக சமையல் செய்யலாம். முன்பெல்லாம் நம் பாட்டிமார்கள், தாய்மார்கள் யாரும் மிளகாய் பொடியை கடைகளில் வாங்கியதில்லை ஆனால் இன்றோ நாம் எதற்கெடுத்தாலும் இன்ஸ்டன்டாக வேண்டுமென்று ஆரோக்கியத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறோம். புதிதாக மிளகாய் பொடி அரைக்க நினைப்பவர்களும், மெஷினுக்கு போகாமல் கொஞ்சமாக அரைக்க நினைப்பவர்களும் இந்த அளவின்படி, இந்த முறையில் மிக்ஸியிலேயே அரைத்துக் கொள்ளலாம். அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

chilli-powder

‘குழம்பு மிளகாய்த் தூள்’ அரைக்க தேவையான பொருட்கள்:
தனியா – 150 கிராம்
வர மிளகாய் – 100 கிராம்
மஞ்சள் தூள் – 5 கிராம்

- Advertisement -

சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகு – 11/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 11/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 11/2 டேபிள் ஸ்பூன்

chilli-powder1

பச்சரிசி – 11/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 11/2 டீஸ்பூன்
கடுகு – 11/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து

- Advertisement -

‘குழம்பு மிளகாய்த் தூள்’ செய்ய வறுக்கும் முறை:
ஒரு வாயகன்ற அடிகனமான வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளுங்கள். பின்னர் மிதமான தீயில் வைத்துக் கொண்டு தனியாவை முதலில் சேர்த்து லேசாக வாசம் போக வறுத்து எடுக்க வேண்டும். தனியா நிறம் மாறி விடக்கூடாது அதே போல கருகி விடவும் கூடாது. எனவே லேசாக 2 லிருந்து 3 நிமிடம் வரை வறுத்தால் போதுமானது. பின்னர் காம்பு நீக்காமல் வர மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு வறுத்து எடுக்க வேண்டும். மிளகாயை காம்பு நீக்கி வறுத்தால் உள்ளிருக்கும் விதை வறுபடும் பொழுது கருகிவிடும் வாய்ப்புகள் உண்டு. எனவே சூடு ஏறினால் போதும், அதிகம் வறுபட வேண்டிய அவசியம் இல்லை.

chilli-powder2

பின் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி ஆகிய பொருட்களை ஒன்றாக சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுக்கலாம். அரிசி பொரிந்து லேசாக வறுபட்டதும் அவற்றை எடுத்து தனியாக வைத்து விடலாம். பச்சரிசிக்கு பதிலாக புழுங்கலரிசியும் சேர்க்கலாம். ஒரு சில பொருட்கள் தனித்தனியாகவும், ஒரு சில பொருட்களை ஒன்றாகவும் சேர்த்து அரைக்கும் பொழுது சீரான பதத்தில் வறுபடும் எனவே இதே முறையில் தனித்தனியாக சேர்க்க வேண்டிய பொருள்களை தனித்தனியாகவும், ஒன்றாக சேர்க்க வேண்டிய பொருட்களில் ஒன்றாகவும் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள் சரியாக வரும்.

chilli-powder3

பின் சீரகம், வெந்தயம், கடுகு ஆகிய மூன்றையும் சேர்த்து இதே போல லேசாக சூடு ஏறும் அளவிற்கு வறுத்தால் போதும். அதிகம் வறுபட வேண்டிய அவசியமில்லை என்பதை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகு சேர்த்து ஒரு நிமிடம் வறுபட்டதும், அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து லேசாக பொரிந்து வந்ததும் இறக்கி விடலாம். பின்னர் வறுத்து வைத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் நன்கு ஆற விடுங்கள். நன்கு ஆறியதும் எல்லாவற்றையும் நன்கு கலந்து இரண்டாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மசாலா அரைக்கும் பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

chilli-powder6

நாம் என்ன தான் மிக்ஸியில் அரைத்தாலும் மெஷினில் அரைத்தது போல மிகவும் நைசாக அரைபடாது, எனவே ஒரு சல்லடை கொண்டு சலித்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் திப்பியை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் நன்கு கலந்து ஆற விடுங்கள். மிளகாய்த்தூள் ஆறியதும் நீங்கள் எப்போதும் போல எதில் ஸ்டோர் செய்து வைத்தாலும் டைட்டாக மூடி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். மிளகாய் தூளில் வண்டு வராமல் இருக்க ஒரு துண்டு வசம்பை போட்டால் போதும். இந்த முறையில் நீங்கள் குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது மிக்ஸி ஜார் போதுமானது. நிறைய அரைக்க வேண்டும் என்றால் கட்டாயம் மெஷினில் அரைப்பது தான் நல்லது.

- Advertisement -