இன்றைய காலத்தில் அதிக அளவில் நடைமுறையில் இருக்கக்கூடிய விஷயமாக கருதப்படுவது மதிய நேரத்தில் மட்டுமே சாதம் சாப்பிட வேண்டும் என்பதுதான். அதேபோல் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் சாப்பிட வேண்டும். அதுதான் உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். மதியம் வடித்த சாதம் மீதம் ஆகி சிறிதளவு இருந்தால் கூட அதை வீணாக்கக்கூடிய நபர்களும் பலர் இருக்கிறார்கள்.
மதியம் வடித்த சாதம் மீதமான நிலையில் அதை வீணாக்காமல் இரவில் சப்பாத்தி செய்யும் பொழுது அதனுடன் வடித்த சாதத்தை கலந்து சப்பாத்தி செய்வதன் மூலம் சாதமும் காலியாகி விடும். சப்பாத்தியும் சாப்பிட்டது போல் இருக்கும். இந்த சிம்பிளான ஐடியாவை நாம் நினைவில் வைத்துக் கொண்டும் என்றால் நம்முடைய வீட்டில் சாதம் மீந்து போனாலும் வீணாகாது. அதே நேரத்தில் இரவில் அருமையான மிருதுவான சாஃப்ட்டான சப்பாத்தியும் தயாராகிவிடும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் மீந்து போன சாதத்தை வைத்து எப்படி சப்பாத்தி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- மீந்து போன சாதம் – 1 கப்
- கோதுமை மாவு – 2 கப்
- தேவையான அளவு – உப்பு
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி நன்றாக மிக்ஸி ஜார் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் சேர்க்க வேண்டும். அதற்கு சமமான அளவு கோதுமை மாவையும் சேர்க்க வேண்டும்.
சாதத்தில் உப்பு சேர்த்து இருந்தால் மாவிற்கு ஏற்றவாறு உப்பை போட்டுக் கொள்ள வேண்டும். சாதத்தில் உப்பு சேர்க்காத பட்சத்தில் அதற்கும் சேர்த்து உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அவை அனைத்தையும் நன்றாக கிளறிவிட்டு மிக்ஸி ஜாரில் அரைக்க வேண்டும்.
இதை விட்டு விட்டு அரைத்து திறந்து ஒரு கிளறு கிளறி மறுபடியும் இரண்டு சுற்று சுற்ற வேண்டும். இப்படி சாதம் முழுவதும் அரைந்து மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் நாம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. அந்த சாதத்தில் இருக்கும் ஈரப்பதமே அதிக அளவில் இருக்கும். இப்பொழுது சப்பாத்தி மாவு பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்த பிறகு இதன் மேல் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெயை ஊற்றி நன்றாக தடவி 20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைத்து விட வேண்டும். பிறகு நாம் எப்பொழுதும் போல் சப்பாத்திக்கு மாவு உருட்டுவது போல் உருட்டி சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு ஒரு புறம் லேசாக நிறம் மாறிய பிறகு அதை திருப்பி போட்டு விருப்பம் இருப்பவர்கள் சப்பாத்தியில் நெய் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளலாம். இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: உடுப்பி ஹோட்டல் ஸ்டைலில் பீன்ஸ் பொரியல் ரெசிபி
இந்த சப்பாத்தியில் சாதம் சேர்ந்து இருக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு செய்து தர முடியும். வெறும் சப்பாத்தியை சாப்பிடுவதை விட மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.