சாதம் வீணாகி விட்டால் இனி கவலை வேண்டாம். மதியம் மீதமான பழைய சாதத்தை வைத்து இரவு அல்லது சாயங்கால நேரத்தில் குழிப்பணியாரத்தை சுட்டு விடலாம். இப்படி குழி பணியாரம் சுட்டு கொடுத்தால் ஒரு பணியாரமும் மிஞ்சாது. ஒரு சாதமும் வீணாகாது. வாங்க ருசி தரக்கூடிய இந்த பணியாரத்தை எப்படி செய்வது என்ற ரெசிபியை தெரிந்து கொள்வோம். அட பணியாரம் மாவில் சுட்டால் கூட இப்படி ஒரு சுவையான பணியாரம் கிடைக்காது பாத்துக்கோங்க.
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ரவை – 1/4 கப் போட்டு, முதலில் பொடித்துக் கொள்ள வேண்டும். ரவை ஓரளவுக்குத் தான் அரைபட்டு வரும். அரைத்த இந்த ரவையோடு மீதமான சாதம் – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், தயிர் – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 1/4 கப் ஊற்றி எல்லா பொருட்களையும் ஒன்றாக அமைய விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இன்னும் கொஞ்சம் தேவைப்பட்டால் ஒருமுறை அரைத்து பார்த்துவிட்டு, மீண்டும் தண்ணீர் ஊற்றி இந்த மாவை அரைத்துக் கொள்ளுங்கள்.
மிக்ஸி ஜாரில் இருந்து அரைத்த இந்த மாவை ஒரு கணத்தில் தனியாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு – 1/4 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2, கருவேப்பிலை – 1 கொத்து, 2 சிட்டிகை உப்பு, இந்த பொருட்களை எல்லாம் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விடுங்கள்.
அதன் பின்பு துருவிய கேரட் – 1 கைப்பிடி அளவு, மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு இந்த தாளிப்பை அப்படியே கிண்ணத்தில் அரைத்து வைத்திருக்கும் மாவில் கொட்டி, மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவு இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்கவேண்டும். அவ்வளவு தான். குழிப்பணியார மாவு நமக்கு ரெடி.
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து விட்டு எண்ணெய் தடவி இந்த பணியார மாவை பணியாரக் கல்லில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு வேக வைத்து இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறம் வந்தவுடன் எடுத்து விடலாம். சாதாரணமாக ஊற்றும் பணியாரத்தை விட, இந்த பணியாரம் வேக கொஞ்சம் நேரம் எடுக்கும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு நன்றாக வேக வைத்து எடுங்கள். சீக்கிரம் ஊற்றி ஊற்றி எடுத்து விட்டால் உள்ளே மாவு பிறகு அப்படியே இருக்கும்.
கொஞ்சம் தாராளமாக எண்ணெய் ஊற்றி பணியாரத்தை சுட்டு எடுத்து சுவைத்துப் பாருங்கள். அத்தனை அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் வெறும் பணியாரத்தை சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.