ஐப்பசி மாத அமாவாசை முடிந்த பிறகு, வரக்கூடிய பிரதமை திதியிலிருந்து இந்த மஹா கந்த சஷ்டி விரதமானது துவங்கும். முருக பக்தர்கள் எல்லோருக்கும் இந்த சஷ்டி விரதத்தின் ஆறு நாட்களும் திருவிழா கோலம் தான். ஏழாவது நாள் முருகனுக்கு திருக்கல்யாணம். இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் எந்த தேதியில் இருந்து துவங்குகிறது, எந்த தேதியில் விரதத்தை நிறைவு செய்து கொள்வது. ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
நவம்பர் 2, 2024 ஆம் தேதி கந்த சஷ்டி விரதத்தை துவங்க வேண்டும். சில பேர் இந்த விரதத்தை 6 நாட்கள் மேற்கொள்வார்கள். ஆனால் கந்த சஷ்டி விரதம் என்பது 7 நாட்கள் இருக்க வேண்டிய விரதம். இறுதி நாளான முருகப்பெருமானின் திருக்கல்யாணம் அன்றும் சேர்ந்து விரதம் இருந்து, திருக்கல்யாணம் முடிந்த பிறகு விரதத்தை நிறைவு செய்து கொள்வது சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் 6 நாள் விரதம், 7 நாள் விரதத்தை எல்லாம் மேற்கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர்கள் ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும் அல்லவா அன்று மட்டும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக குழந்தை வரும் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஏழு நாட்களும் ஒரு வரம். இந்த விரதத்தை நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது உறுதி. குழந்தை பாக்கியத்திற்கு மட்டும் தான் இந்த விரதம் என்று கிடையாது. நோய் தீர வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், வறுமை நீங்க வேண்டும், கடன் தீர வேண்டும், என்று உங்களுக்கு எந்த குறைகள் இருந்தாலும் முருகப்பெருமானே நீயே கதி என்று இந்த விரதத்தை மேற்கொள்ளுங்கள். அந்த குறையை நிச்சயம் தீர்த்து வைப்பான் கந்த கடவுள்.
சில பேர் இந்த விரதத்தை காப்புக் கட்டி கலசம் நிறுத்தி வழிபாட்டை மேற்கொள்வார்கள். சில பேர் காப்பு கட்டாமல் வெறும் விரதம் மட்டும் இருப்பார்கள். எப்படி விரதத்தை மேற்கொண்டாலும் சரிதான். அந்த முருகப்பெருமான் ஏற்றுக்கொள்வார். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சரி, உண்மையான பக்தியோடு இந்த கந்த சஷ்டி விரதத்தை துவங்குங்கள். நீங்கள் காப்பு கட்டி கலசம் நிறுத்தி இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றால், நவம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 6:00 மணிக்கு முன்பாகவே உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி கலசம் நிறுத்தி காப்பு கட்டி விரதத்தை துவங்கி விட வேண்டும்.
இந்த ஆறு நாட்களும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் முருகனைப் பற்றி நினைக்க வேண்டும். உங்களுடைய வாய் முருகனது மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அனாவசியமான வார்த்தைகளை பேசக்கூடாது. அடுத்தவர்களிடம் புறம் பேசக்கூடாது. நான் விரதம் இருக்கின்றேன் என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டும் இருக்கக் கூடாது. பகலில் தூங்கக் கூடாது. அடுத்தவர்கள் மனது புண்படும்படி பேசக்கூடாது. அன்றாட வேலைகளை கவனித்துக் கொண்டு விரத நாட்களில் முருகனின் நினைப்போடு இந்த சஷ்டி நாட்களை கடந்து செல்ல வேண்டும்.
அவரவர் உடல் சூழ்நிலையை பொறுத்து விரதம் மேற்கொள்ள வேண்டும். சில பேர் வெறும் பால் பழம் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். சில பேர் ஒரு வேலை உப்பு போடாத உணவு சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். சில பேர் கடுமையாக விரதம் இருப்பார்கள். பெரிய அளவில் வேண்டுதல் இருக்கும்.
அந்த வேண்டுதல் நிறைவேறும் வேண்டுமென்பதற்காக வெறும் பச்சை தண்ணீரை மட்டும் பருகி விட்டு 6 நாள் விரதத்தை மேற்கொள்ளக்கூடிய முருக பக்தர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில பேர் தினமும் ஒவ்வொரு மிளகு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் பருகி விரதம் இருப்பார்கள். முதல் நாள் ஒருமிளகு, இரண்டாவது நாள் இரண்டு மிளகு, என்று ஆறாவது நாள் முடியும்போது ஆறு மிளகாய் சாப்பிட்டு விரதம் மேற்கொள்வார்கள்.
எப்படி விரதம் இருந்தாலும் சரி, விரதம் இருப்பவர்கள் நிறைய தண்ணீரை குடிக்கலாம். தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்து ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைக்கு பால் ஊட்டும் பெண்கள் எல்லாம் இந்த சஷ்டி நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் மட்டும் போதும். உடல்நிலை சரியில்லாதவர்களும் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களும் கூட சாப்பிடாமல் விரதம் இருப்பதை தவிர்த்துக் கொள்ளவும். நீங்கள் எல்லாம் மனதார முருகப்பெருமானை வழிபாடு செய்தாலே கந்தன் அருள் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.
நவம்பர் மாதம் 2ஆம் தேதி தான் சஷ்டி விரதம் துவங்குகிறது. எதற்காக இந்த பதிவு முன்கூட்டியே. முருக பக்தர் எல்லாம் விரதம் இருப்பதற்கு உங்களையும், உங்கள் வீட்டையும், உங்கள் சூழ்நிலையையும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து முருகனை நினைத்து முருகா, இந்த விரதத்தை மேற்கொள்ள எனக்கு தெம்பையும் தைரியத்தையும் சூழ்நிலையையும் அமைத்துக் கொடு என்று கேளுங்கள்.
விரதத்தை தடையில்லாமல் மேற்கொள்ள நீ தான் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுங்கள். நிச்சயம் கந்தனின் அருளை பெறுவதற்கு இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ள முருகன் உங்களுக்கு அருள் புரிவான். இதனால் வரை விரதமே நான் இருந்ததில்லை என்று சொல்லுபவர்கள் கூட, இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளும் பாக்கியம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: தொழிலில் முன்னேற குலதெய்வ வழிபாடு
இந்த வருடம் வரக்கூடிய மகா கந்த சஷ்டி திதியில் முருக பக்தர்கள் அனைவரும் தடைப்படாமல் இந்த விரத நாட்களை நிறைவு செய்ய வேண்டும் என்று வேண்டி, கந்தனுடைய கருணை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.