வாழ்க்கையில் மன அமைதி என்பது இல்லை என்று அதை தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பலரும் நம்மில் உண்டு. மன அமைதி எங்கு இருக்கிறது? என்று ஒரு முனிவர், தன் சீடனுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லும், இந்த அற்புத ஆன்மீகம் சார்ந்த கதையை நீங்களும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னொரு காலத்தில் அருள் மிகுந்த ஞானம் நிறைந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். பல சீடர்களில், ஒரு சீடரை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒருமுறை அந்த சீடன் குருவிடம், நான் வாழ்க்கையில் அமைதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். எப்படி அமைதியுடன் வாழ்வது? என்று ஒரு கேள்வி கேட்டான். முனிவர் மென்சிரிப்புடன் சீடனை ஒரு அழகிய தோட்டத்திற்கு அழைத்து சென்றார்.
தோட்டத்தின் நடுவே ஒரு பெரிய பாறை கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அதை சுட்டிக்காட்டி, இந்த பாறையை நீ நகர்த்த வேண்டும், முடியுமா? என்று கேட்டார். உடனே சீடன், பாறையின் அருகில் சென்று, தன் பலம் கொண்டமட்டும் முயற்சி செய்து நகர்த்தி பார்த்தான். பாறை கொஞ்சமும் அசையவில்லை. கடைசியில் என்னால் முடியவில்லை என்று குருவிடம் வந்து மிகுந்த சோர்வுடன் கூறினான். மீண்டும் ஒரு மென்சரிப்புடன் நீ எவ்வளவு பலம் கொண்டு முயற்சி செய்தாய்? ஆனால் அந்த பாறை கொஞ்சமும் அசைந்ததா? இல்லை அல்லவா? அது போல தான் நம் வாழ்க்கையும்! சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்காது. அதை மாற்ற முயற்சி செய்து சோர்வடைவதை காட்டிலும், பெரும் முட்டாள்தனம் எதுவும் இல்லை. சரி, இங்கே வா என்று அழைத்து ஒரு சிறிய செடியை சுட்டிக்காட்டினார்.
இந்த செடி எவ்வளவு அழகாக தினமும் அதன் போக்கில் மென்மையாக, மெதுவாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு எந்த அவசரமும் கிடையாது, தன் வேலையை பொறுமையாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் செய்து கொண்டிருக்கிறது. அது எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தன் வேலையை மட்டும் செய்கிறது. நீயும் மன அமைதியை தேடாமல் தினமும் உன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி, ஒவ்வொரு நொடியிலும் அதன் மூலம் அமைதியை அடைய வேண்டும்.
முனிவரின் வார்த்தைகள் அவனுக்கு ஆறுதலாக இருந்தாலும், அப்படின்னா நான் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருக்கணுமா? என்று சீடன் கேட்டான். அப்படி இல்லை என்று தலையசைத்துக் கொண்டே முனிவர், நீ செய்ய வேண்டியவை எப்பொழுதும் போல செய்து கொண்டே இரு, ஆனால் அதன் பலனை பற்றி கவலைப்படாதே.. என்று தான் கூற வருகிறேன். ஒரு விதை முளைத்து விருட்சமாக எவ்வளவு காலம் ஆகும்? என்று நம்மால் திட்டமிட முடியாது. ஆனால் அது வளர்வதற்கு தினமும் நீர் ஊற்ற வேண்டும், சூரிய ஒளி கிடைக்க செய்ய வேண்டும் இதுதான் நம் கடமை. அப்போதுதான் அது விருச்சமாக வளரும்.
இதையும் படிக்கலாமே:
பாத்திரங்களில் ஸ்டிக்கர் ரிமூவிங்
அதுபோல வாழ்க்கையில் உன் கடமையை செய்து கொண்டு இருக்க வேண்டும். முடிவுகள் என்ன? என்று யோசிப்பதால் தான் நம் மன அமைதி சீர்கெடுக்கிறது. முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்றால், உன் கடமையிலிருந்து விலகி, மன அமைதியை நீ தனியாக தேடி செல்லக்கூடாது. மன அமைதி என்பது ஒவ்வொரு கணமும் நீ செய்யும் செயலில் தான் இருக்கிறது. நிகழ்காலத்தில் கவனம் செலுத்து, எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பலனை பற்றி சிந்தித்து கவலை கொள்ளாதே, மன அமைதியை தேடாதே என்று கூறினார். அதன் பிறகு சீடன் தெளிந்து, தன் கடமைகளை முழு மனதுடன் செய்ய ஆரம்பித்தான். முடிவுகளைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை.. இதனால் ஒவ்வொரு நொடியிலும் அவன் மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் இருக்க முடிந்தது.