தெய்வங்களை வழிபாடு செய்யும் பொழுது அந்த தெய்வத்திற்காக தனியாக தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். தீபம் ஏற்றாமல் செய்யக்கூடிய வழிபாடு நிறைவடையாது என்று கூறப்படுகிறது. எந்த ஒரு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறார்களோ அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் எதுவும் வராது என்றும் கூறப்படுகிறது. தீபத்திற்கு என்று பலவகையான பலன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான மூலிகைச் செடிகளை பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பழக்கமும் இருந்து வருகிறது. அந்த வகையில் நம்முடைய மனக்குறை நீங்க ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மனக்குறை நீக்கும் தீபம்
சாதாரணமாக ஒரு அகல்விளக்கில் எண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றும் பொழுது நமக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது மூலிகைகளை பயன்படுத்தி தீபம் ஏற்றினோம் என்றால் அந்த மூலிகைகளுக்குரிய பலன் நமக்கு கிடைக்கும். அதனால் விரைவிலேயே நம்முடைய பிரச்சனைகள் தீரும். ஒவ்வொரு விதமான பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான மூலிகைகளை பயன்படுத்தி வழிபாடு செய்வோம். அந்த வகையில் சிவபெருமானுக்கு உரிய மூலிகை பொருளாக கருதப்படும் தும்பை செடியை வைத்து ஏற்றக்கூடிய தீபத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
அனைத்து கிராமப்புறங்களில் சாலை ஓரங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது தான் தும்பை செடி. இதில் இருக்க கூடிய பூக்கள் மிகவும் சிறிய அளவில் இருக்கும். வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும் இதில் அதிக அளவு தேன் இருக்கும். அப்படிப்பட்ட தும்பை செடியில் இருக்கக்கூடிய பூவாக இருந்தாலும், இலையாக இருந்தாலும், வேராக இருந்தாலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்ததாக திகழ்கிறது. அப்படி மருத்துவ குணம் நிறைந்த இந்த தும்பை செடியை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும் என்று தெரிந்து கொள்வோம்.
தும்பை பூவை மாலையாக தொடுத்து சிவபெருமானுக்கு பிரதோஷ நேரத்தில் சூட்டி வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் தும்பை பூவை சிவபெருமானின் சிரசில் தான் வைக்க வேண்டும். பாதத்தில் வைக்கக்கூடாது என்பதுதான். அதேபோல் இந்த தும்பை செடியின் வேரை பணம் வைக்கும் இடத்தில் நாம் வைத்தோம் என்றால் பண வசியம் ஏற்பட்டு பணவரவு அதிக அளவில் உண்டாகும்.
இந்த தும்பை செடியை மஞ்சள் தண்ணீர் தெளித்து பறித்து மூன்று நாட்கள் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு கத்தி, நகம் படாத அளவிற்கு வேரை எடுத்து அதனுடன் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து எந்த இடத்தில் பணம் நகை வைத்து இருக்கிறோமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். அடுத்ததாக தும்பை இலையை வைத்து தீபம் போடும் முறையைப் பற்றி பார்ப்போம்.
இந்த தீபத்தை திங்கட்கிழமை அன்று ஏற்ற வேண்டும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றலாம் அல்லது மாலை 5 மணிக்கு மேல் இந்த தீபத்தை ஏற்றலாம். ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தும்பை இலை ஒன்றை எடுத்து சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அகல்விளக்கில் தும்பை இலையை திரி போல வைக்க வேண்டும். தும்பை இலையின் நுனிப்பகுதி உள்ளே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு நல்லெண்ணெய் ஊற்றி இந்த இலைக்கு மேல் ஒரு பஞ்சுத்திரி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தீபம் ஏற்றுங்கள்.
தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து உங்கள் மனதில் இருக்கக்கூடிய சொல்ல முடியாத பாரமாக இருந்தாலும் அதை மனதார அந்த தீபத்திடம் கூற வேண்டும். குறைந்தது பத்து நிமிடமாவது தீபத்தின் முன்பு அமர்ந்து உங்களுடைய கஷ்டங்களையும், மனக்குறைகளையும், பாரங்களையும் சொல்ல வேண்டும். இப்படி ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது சிவபெருமானின் அருளால் நம்முடைய மனக்குறைகள் அனைத்தும் நீங்கும். துன்பங்கள் விலகி ஓடும்.
இதையும் படிக்கலாமே:வேண்டிய வரத்தை அருளும் புரட்டாசி கிருத்திகை வழிபாடு
பல மருத்துவ, மகத்துவ குணங்கள் நிறைந்த தும்பை செடியை இந்த முறையில் பயன்படுத்தி நம் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.