கேட்ட வரம் கிடைக்க மார்கழி பௌர்ணமி வழிபாடு

margali pournami
- Advertisement -

சூரிய பகவான் குருவின் வீட்டில் சஞ்சாரம் செய்யும் மாதமாக தான் மார்கழி மாதம் திகழ்கிறது. மேலும் இந்த மாதம் தான் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரமாக திகழ்வதால் அனைத்து இல்லங்களிலும் மார்கழி மாதத்தில் விடியற் காலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விடியற்காலையில் இறைவழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்ற காரணத்தினால் தான் அனைத்து ஆலயங்களிலும் விடியற்காலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று எந்த தெய்வங்களை வழிப்பட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முழு மனதோடு நம்பிக்கையோடு வழிபட்டால் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நாட்கள் விசேஷமான நாட்களாக திகழ்கிறது. அந்த நாட்களில் அந்த தெய்வத்திற்காக நாம் விரதம் இருக்கும்போது அதன் பலன் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கும் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் மார்கழி மாத பௌர்ணமி என்பது சிவன், விஷ்ணு, பார்வதி என்று மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாளாக திகழ்கிறது.

- Advertisement -

அன்றைய தினம் முழுமையாக விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் கேட்ட வரம் கிடைக்கும். விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வாசல் வாசலில் கோலம் போட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி என்ன வரம் வேண்டுமோ அதை சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து தங்களால் முடிந்த ஏதாவது அபிஷேக பொருளை அபிஷேகத்திற்காக வாங்கி கொடுத்து வழிபட்டு விட்டு வரவேண்டும்.

அடுத்ததாக அருகில் இருக்கக்கூடிய அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அம்மன் கோவிலில் அபிஷேகத்திற்காக பஞ்சாமிர்தம் செய்து தர வேண்டும். அல்லது பஞ்சாமிருதத்தில் போடுவதற்காக நாட்டுச்சர்க்கரையோ அல்லது கல்கண்டையோ வாங்கி தர வேண்டும். இப்படி ஏதாவது ஒரு இனிப்பை வாங்கி தருவதன் மூலம் நம் வாழ்க்கையும் இனிமையாகும் என்பது ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது. மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பு பொருட்களை பிரசாதமாக வழங்குவதன் மூலமும் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

- Advertisement -

பிறகு மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விஷ்ணு ஆலயத்திற்கு சென்று துளசி மாலை வாங்கி கொடுத்து நெய் தீபம் ஏற்றி வைத்து பெருமாளை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நன்மையைத் தரும். இயலாதவர்கள் தங்களால் இயன்ற அளவு விரதத்தை இருந்து கொள்ளலாம். மேலும் அன்றைய தினம் மவுன விரதம் இருப்பது மிகவும் நல்லது. அன்றைய தினம் நாம் என்ன சொல்கிறோமோ அது நமக்கு பல மடங்காக கிடைக்கும் என்பதால் மௌனம் விரதம் இருந்து மனதிற்குள் நல்லதை மட்டுமே நினைத்து தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது அதனால் நமக்கு நன்மை ஏற்படும்.

மௌன விரதம் இருக்க இயலாதவர்கள் எதிர்மறை சொற்களை சொல்வதையும் நினைப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இரவில் முழு நிலவை பார்த்து தரிசனம் செய்துவிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை கண்டுபிடிக்க பரிகாரம்

இந்த முறையில் மார்கழி பௌர்ணமி அன்று விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டவர்கள் கேட்ட வரம் கிடைக்கும். வெற்றிகள் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

- Advertisement -