மகாலட்சுமியின் அம்சம் நிரம்பிய செடிகளில் ஒன்று “மருதாணி செடி” ஆகும். மாதுளை, நெல்லி, மல்லி, சாமந்தி, தாமரை, மருதாணி, துளசி ஆகியவைகளில் லட்சுமி கடாட்சம் நிரம்பியுள்ளது. இந்த செடிகளை எல்லாம் வீட்டில் வளர்ப்பவர்கள் எதிர்மறையான வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது. அந்த வகையில் மருதாணி செடி வீட்டில் வளர்ப்பவர்கள் செய்யக் கூடாத சில விஷயங்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
நிதிகளுக்கெல்லாம் அதிபதியாக இருப்பவர் குபேரன்! இந்த குபேரனுக்கு கூட நிதி சார்ந்த பிரச்சனை வந்து யாவற்றையும் இழந்த போது, நெல்லி மரம் தான் பரிகாரமாக அமைந்ததாம். நெல்லி மரம் வளர்த்தால் நிதி சார்ந்த பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். அது போல மருதாணி செடி வீட்டில் வளர்ப்பவர்களுக்கு மங்கள காரியங்களுக்கு குறைவிருக்காது. அடிக்கடி சுப நிகழ்ச்சிகள் அந்த வீட்டில் நடைபெறும். விருந்து, விசேஷங்களில் அதிகமாக கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மருதாணி செடி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது. மருதாணியை பெண்கள் கையில் எப்போதும் இருப்பது மிகவும் ராசியானது. மருதாணி உடல் உஷ்ணத்தை தனித்து சரீரத்தை சுத்தம் செய்கிறது. இந்த மருதாணி செடியின் இலைகளை மாலை 6 மணிக்கு மேல் அந்தி சாய்ந்த பிறகு யாருக்கும் தானம் செய்யக்கூடாது. தெரிந்தும் தெரியாமலும் இந்த விஷயத்தை இனி செய்யாதீர்கள். பொதுவாகவே 6:00 மணிக்கு மேல் எந்த விதமான செடிகளையும் தொந்தரவு செய்யக் கூடாது. தொடுவதோ, பறிப்பதோ கூடாது என்பது அந்த காலம் முதல் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
எந்த இலைகளை பறிப்பதாக இருந்தாலும், காய், கனிகள் வேண்டுமானதாக இருந்தாலும், அந்தி சாய்வதற்கு முன்னரே அதனை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி முன்கூட்டியே மருதாணி இலைகளை பறித்து வைத்திருந்தாலும், அந்தி சாய்ந்த பிறகு தானம் கொடுக்காதீர்கள். மேலும் மருதாணி இலைகளை யாராவது கேட்டால் இலவசமாக தானம் செய்யாதீர்கள். மருதாணி மகாலட்சுமியின் அம்சம் என்பதால், ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் பொழுது சாஸ்திரத்திற்கு ஒரு ரூபாயாவது நாணயமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமை, செவ்வாய்க் கிழமைகளில் பணம், நகை வெளியில் செல்ல கூடாது என்பது போல, இது போன்ற விஷயங்களும் நம் வீட்டில் இருந்து வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. நெல்லி மரம் வைத்திருப்பவர்களும் நெல்லிக்காய்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் முன்னர் ஒரு ரூபாயை பெற்றுக் கொண்டு பின்னர் தானம் செய்யுங்கள். ஒரு ரூபாயில் யாரும் குறைந்துவிடப் போவது கிடையாது. தானம் பெறுபவர்களும், தானம் கொடுப்பவர்களும் செல்வ செழிப்புடன் இருக்க, மகாலட்சுமியின் அருளோடு இருக்க இந்த ஒரு ரூபாய் வழிவகை செய்யும். எனவே தயங்காமல் தானம் கேட்பவரிடம் இதை எடுத்துக் கூறி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
கார்த்திகை பௌர்ணமி அன்று சொல்ல வேண்டிய சிவ மந்திரம்
வீட்டில் இருக்கும் ஆண்கள் மருதாணி அரைத்து வைத்துக் கொண்டால் எந்த காரியமும் தடை இல்லாமல் வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையும் உண்டு. குறிப்பாக கால்களில் மருதாணி வைப்பது மிகவும் விசேஷமானது. காலில் மருதாணி இட்டுக் கொள்வதால் தரித்திரங்கள் ஒழியும். நம்மை பிடித்த பீடைகளும் நம்மை விட்டு செல்லும். கால் வழியாகத் தான் சில வகையான திருஷ்டி தோஷங்களும், செய்வினை ஏவல்களும், பாத சனியும் பிடிக்கிறது. எனவே பாதங்களை எப்பொழுது மருதாணியால் அலங்கரிக்க இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.