ஹைதராபாத் போன்ற பகுதிகளில் இருக்கும் சிறிய சிறிய கடைகள் முதல் பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை இந்த மசாலா இட்லி ரொம்பவே பிரசித்தி பெற்றதாக இருக்கும். மசாலா தயாரித்து அதன் மீது இட்லி மாவை ஊற்றி வேக வைத்து கொடுக்கும் பொழுது அதனுடைய ருசியே அவ்வளவு டேஸ்டியாக இருக்கும். இதை ரொம்பவே சுலபமாக வீட்டிலும் நாம் தயாரிக்கலாம். சூப்பரான ஹைதராபாத் ஸ்பெஷல் மசாலா இட்லி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவில் இனி கற்றுக் கொள்ளப் போகிறோம்.
மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மல்லி தூள் – ஒரு ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், சோம்புத்தூள் – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வெண்ணெய் – தேவையான அளவு, இட்லி மாவு மற்றும் இட்லி பொடி – தேவையான அளவு.
மசாலா இட்லி செய்முறை விளக்கம்:
மசாலா இட்லி செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை தோலுரித்து எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ, அவ்வளவுக்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியையும் அதே போல குட்டி குட்டியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மல்லி தழையை சுத்தம் செய்து இதே போல நறுக்கி பொடி பொடியாக வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து காய விடுங்கள். இந்த மசாலாவை நீங்கள் தோசை கல்லிலேயே வதக்கி தயாரிக்கலாம்! அது உங்களுக்கு வாட்டமாக இல்லை என்றால், தனியாக ஒரு வாணலியில் வதக்கி ரெடி செய்து பின்னர் தோசை கல்லில் சேர்த்தும் கொள்ளலாம். தோசை கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடி பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் மல்லி தழைகளை சேர்த்து கலந்து விடுங்கள்.
இதனுடன் மல்லி தூள், மிளகாய் தூள், சோம்பு தூள், மிளகுத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை மேற்கூறிய அளவுகளின் படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். மசாலாக்களின் வாசம் போக ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். நன்கு சுருள வதங்கியதும், நீங்கள் எத்தனை இட்லிகள் சுட வேண்டுமோ, அத்தனை பிரிவுகளாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மசாலாவின் மீது ஒரு கரண்டி மாவை எடுத்து இட்லிக்கு ஊற்றுவது போல கொஞ்சம் போல் ஊற்றுங்கள்.
ஒரு நிமிடம் நன்கு அப்படியே வேக விட்டு விடுங்கள். அதன் மீது கொஞ்சம் போல் இட்லி பொடியை தூவிக் கொள்ளுங்கள். இது ஆப்ஷனல் தான், இல்லை என்றால் விட்டுவிடலாம். சுற்றிலும் வெண்ணையை உருக்கி வேக விடுங்கள். பிறகு வெந்து வந்ததும் மறுபடியும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். ரெண்டு புறமும் சிவக்க முறுவலாக வறுபட்டதும், எடுத்து தட்டில் வைத்து சுடச்சுட சட்னி அல்லது சாம்பாருடன் தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டாக இருக்கும். தொட்டுக்க எதுவுமே இல்லாமல் வெறுமனே சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி செஞ்சு பார்த்து அசத்துங்க.