மாவு அரைக்காம பத்தே நிமிஷத்துல ஒரு சூப்பரான மசாலா இட்லி ரெடி பண்ணிடலாம் தெரியுமா? மாவு அரைக்காமா இட்லியே கஷ்டம், இதுல மசாலா இட்லி எப்படி? அப்படின்னு தானே யோசிக்கிறீங்க, வாங்க அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்று கேட்கிறீர்களா? ஆமாம் இதுவரையில் நாம் வெறும் இட்லி மட்டும் சாப்பிட்டிருப்போம். இப்போது இந்த இட்லியில் கொஞ்சம் காயும் சேர்த்து சாப்பிடும் போது அது இன்னும் ஆரோக்கியம் தானே. அதிலும் மாவு அரைத்து கஷ்டப்படாமல் இன்ஸ்டன்டாக உடனே இப்படி ஒரு ஆரோக்கியமான உணவு கிடைத்தல் நல்லது தானே அப்படி ஒரு இட்லி ரெசிபியை தான் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த இட்லி செய்வதற்கு முதலில் மாவை தயார் செய்து கொள்வோம். மாவு என்றவுடன் அரிசி, உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டியது என்று நினைத்து விட வேண்டாம் இது இன்ஸ்டன்ட் மாவு தான். இதற்கு ஒரு கப் ரவை எடுத்துக் கொள்ளுங்கள் எந்த கப்பில் ரவை அளக்கிறீர்களோ அதே கப்பில் ஒரு கப் அளவிற்கு தயிர் அதே கப்பில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் மூன்றையும் ஒன்றாக கலந்து கால் டீஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு பத்து நிமிடம் மூடி வைத்து விடுங்கள் அவ்வளவு தான் 10 நிமிடம் கழித்து இதில் கொஞ்சம் ஈனோ சேர்த்து அடித்து எடுத்து வைத்துக் கொண்டால் இந்த இட்லிக்கான மாவு தயார்.

- Advertisement -

இப்பொழுது இந்த இட்லிக்கு உள்ளே வைக்கும் மசாலாவை தயார் செய்து விடுவோம். இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து மசித்து கொள்ளுங்கள். அதில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதே போல் ஒரு பச்சை மிளகாய் கொஞ்சம் கருவேப்பிலை கொத்தமல்லி என அனைத்தையும் நல்ல பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அத்துடன் அரை டீஸ்பூன் அளவிற்கு மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு என இவை அனைத்தையும் சேர்த்த பிறகு அரை டீஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்ந்து இந்த மசாலாவை நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இட்லிக்கு உள்ளே வைக்கும் மசாலாவும் தயாராகி விட்டது. உங்களுக்கு தேவைப்பட்டால் உருளைக்கிழங்கோடு கேரட் , பீன்ஸ் போன்ற காய்கறிகளை சின்ன சின்னதாக நறுக்கியும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்போது பத்து நிமிடம் கழித்து தயாராக இருக்கும் மாவை ஒரு முறை நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இட்லி தட்டு வைத்து தண்ணீரை கொதிக்க விடுங்கள். இப்போது நான்கு ஒரே அளவு உள்ள சின்ன கிண்ணங்கள் அல்லது டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இந்த டம்ளரில் முதலில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு, கரைத்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி மாவை ஊற்றிய பிறகு நீங்கள் உருட்டி வைத்திருக்கும் மசாலாவை வைத்து மேலும் ஒரு கரண்டி மாவை ஊற்றுங்கள். இதே முறையில் இட்லி தட்டில் கூட ஊற்றலாம்.

- Advertisement -

நீங்கள் கிண்ணங்களில் ஊற்றினாலும் சரி டம்பளர்களில் ஊற்றி வைத்தாலும் சரி,அதன் முக்கால் பாகம் வரை மாவு இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் இதை அப்படியே எடுத்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்து விடுங்கள். வெந்த பிறகு சூடு ஆறியவுடன் எடுத்து ஒரு தட்டில் கவுத்து தட்டினால் போதும். இட்லி அருமையாக ரெடி ஆகிவிடும்.

இதற்கு தனியாக சைட் டிஷ் எதுவும் தேவையில்லை இதில் உள்ளிருக்கும் மசாலாவை போதும். காலை பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற நல்ல ஒருஆரோக்கியமான உணவு தான் இது சேர்க்கும் காய்கள் மட்டும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -