இந்த பிரபஞ்சத்தில் இறைசக்தி எந்த அளவிற்கு நிறைந்து இருக்கின்றதோ, அதே அளவிற்கு நம் கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான சில சக்திகளும் தங்களுடைய வேலையை செய்து கொண்டுதான் இருக்கின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத எத்தனையோ சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் உண்டு. அந்த வரிசையில் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, மருந்து வைப்பது என்று இன்றும் சில வேலைகளை, சில மனிதர்கள் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.
செய்வினை, பில்லி சூனியம் எல்லாம் பொய். இவையெல்லாம் இந்த பிரபஞ்சத்தில் கிடையவே கிடையாது என்று சொல்லுபவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படிக்க வேண்டாம். உங்களுடைய வீட்டில் இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலின் மூலம் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், உங்களுக்கு ஏவல் பில்லி சூனியத்தின் மீது நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பரிகாரம் உங்களுக்கு ஒரு உதவியாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் கருப்பு வெள்ளை பொருட்களை தூக்கி வெளியில் போட வேண்டாமா? இப்படி பட்டியல் எடுத்தால், வீட்டிலிருக்கும் பாதி பொருட்கள் வீட்டை விட்டு வெளியே போய்விடும் என்று யோசிக்கிறீர்களா? சரி, இதற்கான சரியான விடையை இப்போது தெரிந்துகொள்வோம். கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய பொருள் மிளகு. வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய பொருள் வெண்கடுகு. இந்த இரண்டு பொருளை வைத்து தான் நாம் எதிர்மறை ஆற்றலை அழிக்க ஒரு சிறிய பரிகாரத்தை செய்ய போகின்றோம்.
ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு கைப்பிடி அளவு கருப்பு மிளகு, அதாவது சமையலுக்கு பயன்படுத்தும் மிளகை, புதியதாக வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகு. இந்த 2 பொருட்களையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மேலே கரும்புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும். (ஒரு சிறிய கிண்ணத்தில் மிளகு ஒரு கைப்பிடி அளவு, வென்கடுகு ஒரு கைப்பிடி அளவு, அதன் மேலே ஒரு எலுமிச்சம்பழம்.)
இப்படி ஒரு கிண்ணத்தில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு தயார் செய்துவிட்டு, இந்த கிண்ணத்தை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு ‘வீட்டில் இருக்கக்கூடிய எப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றலாக இருந்தாலும் சரி, அது வீட்டை விட்டு வெளியே சென்று விட வேண்டும்’ என்று குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து வரவேற்பறையில் நீங்கள் தயார் செய்த கிண்ணத்தை வைத்து விடுங்கள்.
மறுநாள் காலை எழுந்து இந்த கிண்ணத்தில் இருக்கும் பொருட்களை உங்கள் கை படாமல், கிண்ணத்தோடு எடுத்து உள்ளே இருக்கும் பொருட்களை மட்டும் ஒரு கவரில் கொட்டி மூட்டை கட்டி, உங்கள் வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் சென்று, அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்று, இந்த எல்லாப் பொருளையும் நெருப்பு மூட்டி அதில் போட்டு விட வேண்டும். மிளகு, வென்கடுகு, எலுமிச்சம்பழம் 3 பொருட்களும் நெருப்பில் பொசுங்கி விடவேண்டும். கற்பூரம் போட்டு நெருப்பு மூட்டி இந்த பொருட்களை, அந்த நெருப்பில் போட்டு விடலாம்.
அமாவாசை இரவு இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்றும் அமாவாசை அன்றும் பரிகாரத்தினை செய்யும் போது அதனுடைய சக்தி இரண்டு மடங்காக நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலும் உங்களுடைய வீட்டில் நல்லதொரு மாற்றம் தெரியும்.
சில பேர் வீடுகளில் எதனால்தான் இவ்வளவு சண்டை சச்சரவு, இவ்வளவு பிரச்சனைகள், இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்றே தெரியாது. இனம் புரியாத குழப்பம் வீட்டில் இருக்கும். வீடு இருள் சூழ்ந்து இருக்கும். யாரோ சூனியம் வைத்து விட்டது போல என மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த சுலபமான பரிகாரத்தை பயம் இல்லாமல் செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.