நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ஆசை என்பது இருக்கும். அந்த ஆசை நியாயமான ஆசையாக இருக்கும் பட்சத்தில் அதை முயற்சி செய்தும் பார்ப்போம். பலருக்கும் அந்த முயற்சியில் வெற்றிகள் கிடைத்து அவர்களின் ஆசை நிறைவேறிவிடும். ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் முயற்சிகள் எடுத்தாலும் அந்த ஆசைகள் நிறைவேறாமலேயே சென்று விடும் அல்லது அது நிறைவேறுவதில் தடைகள் ஏற்படும். இப்படி இருக்கக்கூடிய நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் அதே சமயம் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறவும் கண்ணாடியை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நினைத்தது நடக்க கண்ணாடி வழிபாடு
ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஒவ்வொரு வகையான வழிபாட்டு முறை என்பது இருக்கும். தெய்வங்களை நாம் வழிபாடு செய்வதை போல தெய்வங்களுக்கு சரிசமமாக சில பொருட்களையும் வைத்து நாம் வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யக்கூடிய பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் முகம் பார்க்கும் கண்ணாடி. பலரும் இந்த கண்ணாடியை தங்களுடைய வீட்டு பூஜை அறையில் வைத்து அதில் நாணயத்தின் பிம்பத்தை பார்த்து வணங்குவார்கள். இது ஒரு வகையான வழிபாடு என்றாலும் சாதாரணமாக நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒரு கண்ணாடியை பயன்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளும் வழிமுறையை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இதை மேற்கொள்ளலாம். இதற்கு ஒரு பெரிய கண்ணாடி வேண்டும். இந்த கண்ணாடியை படுக்கையறையை தவிர்த்து வேறு எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். புதிதாக வாங்கி வந்த கண்ணாடியில் சிறிது விபூதி தண்ணீர் ஊற்றி நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு சுத்தமான வெள்ளை துணியை வைத்து ஒரு முறை துடைத்து கிழக்கு பார்த்தவாறு கண்ணாடியை மாட்டிக்கொள்ளுங்கள்.
இந்த கண்ணாடிக்கு திரை ஒன்று போட்டுக் கொள்ளுங்கள். இரவு நாம் உறங்கி காலையில் கண்விழிப்போம் அல்லவா? அவ்வாறு விழித்தவுடன் நேராக இந்த கண்ணாடி இருக்கும் அறைக்கு வந்து கண்ணாடிக்கு முன்பாக ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கண்ணாடி திரையை விலக்க வேண்டும். பிறகு கண்ணாடியை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை 11 முறை கூற வேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டது போல் கூற வேண்டும். உதாரணமாக பண பற்றாக்குறை இருக்கிறது என்னும் பட்சத்தில் என்னுடைய தேவைகள் பூர்த்தியாகும் அளவிற்கு பணம் வந்து விட்டது என்று கூறவேண்டும். விரைவிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்றால் விரும்பிய படி நல்ல கணவர் கிடைத்துவிட்டார் என்று கூறவேண்டும். நோய்கள் நீங்க வேண்டும் என்றால் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கூறவேண்டும்.
இப்படி நம்முடைய வேண்டுதல்கள், ஆசைகள் எதுவோ அது நிறைவேறிவிட்டால் எப்படி நாம் சொல்வோமோ அப்படி கண்ணாடியை பார்த்து 11 முறையோ 21 முறையோ நாம் கூறலாம். தொடர்ச்சியாக 48 நாட்கள் இந்த முறையில் நாம் கூறும்பொழுது நம்முடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறிவிடும். 48 நாட்களுக்குள் ஒரு முறையாவது பௌர்ணமி என்பது வரும் அந்த பௌர்ணமி வரும் சமயத்தில் மட்டும் மற்ற நாட்களில் எத்தனை முறை கூறினோமோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக கூற வேண்டும்.
11 முறை கூறியிருந்தால் 22 முறையும், 54 முறை என்றால் 108 முறை என்று இரட்டிப்பாக கூற வேண்டும். இதற்கு காரணம் என்னவென்றால் கண்ணாடி என்பது சந்திரனுக்குரிய பொருளாக கருதப்படுகிறது. நம்முடைய மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு சந்திர பகவானின் அருள் என்பது வேண்டும். கண்ணாடியை பார்த்து நாம் நம்முடைய வேண்டுதலை கூறும்போது அது சந்திர பகவானிடம் கூறியதற்கு சமமாக கருதப்படுகிறது. அதனால் தான் சந்திர பகவானுக்குரிய தினமான பௌர்ணமி தினத்தன்று இரட்டிப்பாக நாம் கூறும்பொழுது நமக்கு விரைவிலேயே அந்தப் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:காரிய தடை நீங்க தேங்காய் பரிகாரம்
எந்தவித தெய்வ வழிபாடும் இல்லாமல் கண்ணாடியை வைத்து எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது விரைவிலேயே நம்முடைய வேண்டுதல்களும், ஆசைகளும் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.