- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கிராமத்து சுவையில் மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரொம்ப ரொம்ப சுவையாக செய்வது எப்படி?

கிராமத்து சுவையில் மொச்சை கத்திரிக்காய் குழம்பு ரொம்ப ரொம்ப சுவையாக செய்வது எப்படி?

- Advertisement -

மொச்சைக் கொட்டையையும் கத்தரிக்காயையும் வைத்து ஒரு புளிக் குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். பச்சை மொச்சை அல்லது காய்ந்த மொச்சை எதில் வேண்டுமென்றாலும் இந்த ரெசிபியை நீங்க ட்ரை பண்ணி பார்க்கலாம்.

காய்ந்த மொச்சையாக இருந்தால் 8 மணிநேரம் மொச்சையை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 1/4 கப் அளவு மொச்சையை எடுத்துக் கொண்டால் பின் சொல்லக்கூடிய அளவுகள் எல்லாம் சரியானதாக இருக்கும். மொச்சை ஊறிய தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். எட்டு மணி நேரம் ஊறிய மொச்சைகொட்டைகளை குக்கரில் போட்டு, மொச்சை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, கொஞ்சமாக உப்பு சேர்த்து 3 விசில் விட்டு பக்குவமாக மொச்சை கொட்டைகளை வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு சிறிய எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, புளிக்கரைசலை எடுத்து, அந்த புளிக்கரைசலில் மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு பழுத்த – 1 பெரிய தக்காளி பழத்தை இந்த புளி கரைசலுடன் சேர்த்து உங்கள் கையை வைத்து நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இப்படி தக்காளியை புளிக்கரைசலோடு கரைத்து குழம்பு வைத்தால் இதன் ருசி இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இப்போது புளி கரைசலும் தயாராக உள்ளது‌. குழம்பை தாளித்து விடலாம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், கருவேப்பிலை ஒரு கொத்து, இடித்த பூண்டு பல் – 6, இந்த பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, வெட்டிய 2 கத்தரிக்காய்களை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கி வேக வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயிலேயே கத்திரிக்காய் வேகும்போது குழம்பின் சுவை இன்னும் அதிகரிக்கும். (ஒரு மூடியை போட்டு 2 நிமிடம் போல கத்தரிக்காய்களை எண்ணெயிலேயே நன்றாக வேக வைக்க வேண்டும்.)

- Advertisement -

அடுத்து குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் மொச்சையை தண்ணீரோடு கடாயில் ஊற்றி விடுங்கள். அதன் பின்பு கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி விடுங்கள். நன்றாக கலந்து விட்டு உப்பு காரம் சரி பார்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தனி மிளகாய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

கூட்டி வைத்திருக்கும் இந்த குழம்பை ஒரு மூடி போட்டு 6 லிருந்து 7 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். இதற்குள் மிக்ஸியில் தேங்காய் துருவல் – 1/2 கப், சின்ன வெங்காயம் – 2, சோம்பு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக விழுது போல அரைத்து எடுத்து வாருங்கள்.

குழம்பில் புளியின் பச்சை வாடை போகும் வரை கொதித்து வந்ததும், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை குழம்பில் ஊற்றி, தேவைப்பட்டால் மிக்ஸி ஜாரை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கழுவி, குழம்போடு சேர்த்து மீண்டும் மூடி போட்டு இந்த குழம்பை 4 நிமிடம் போல கொதிக்க வைத்து, மேலே பச்சை கறிவேப்பிலையைத் தூவி சாதத்தில் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். வேறென்ன வேணும். நீங்களே ட்ரை பண்ணி பார்த்தா தான் உங்களுக்கு இதன் சுவை புரியும்.

சற்று முன்