ஹோட்டல் தோசை போலவே மொறுமொறுன்னு வீட்டில் அரைக்கனுமா? அப்படினா மாவு நீங்கள் இப்படித்தான் அரைக்கனும் மறக்காமல் தெரிந்து கொள்ளுங்கள்!

moru-moru-dosai-maavu
- Advertisement -

எல்லோருக்குமே ஹோட்டல் சென்றாலே மொறுமொறு தோசை தான் முதலில் நினைவிற்கு வரும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த மொறுமொறு தோசை வீட்டில் அவ்வளவு எளிதாக சுட்டு விட முடியாது. மொறுமொறு தோசை வருவதற்கு எப்படி மாவு பக்குவமாக அரைக்க வேண்டும்? சுவையான மொறுமொறு ஹோட்டல் தோசை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

மொறுமொறு ஹோட்டல் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 2 கப், உளுத்தம் பருப்பு – கால் கப், கடலைப்பருப்பு – கால் கப், வெள்ளை அவல் – கால் கப், வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, ரவை மற்றும் சர்க்கரை – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

மொறுமொறு ஹோட்டல் தோசை செய்முறை விளக்கம்:
மொறுமொறு ஹோட்டல் தோசை போலவே வருவதற்கு சரியான பக்குவத்தில் அரைக்க வேண்டும். இதற்கு கிரைண்டர் கூட தேவையில்லை. நீங்கள் மிக்ஸியிலேயே அரைத்துக் கொள்ளலாம். உங்களிடம் இட்லி அரிசி இருந்தால் 2 கப் அளவிற்கு அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். எந்த கப்பில் அளக்கிறீர்களோ, அதே அளவிற்கு மற்ற பொருட்களையும் அளக்க வேண்டும். மாற்றி அளந்து விடக் கூடாது. 2 கப் இட்லி அரிசிக்கு கால் கப் உளுந்து, கால் கப் கடலைப்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி ஒன்றிரண்டு முறை அலசி நல்ல தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

உளுந்துடன் கடலைபருப்பு சேர்க்கும் பொழுது தோசை மொறுமொறுவென்று வரும். நான்கு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு கால் கப் அளவிற்கு வெள்ளை அவலை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவல் மற்ற பொருட்களுடன் சேர்த்து ஊற வைக்கவும் கூடாது, தனியாகத்தான் ஊற வைக்க வேண்டும். 10 நிமிடத்திற்கு பிறகு மற்ற எல்லா பொருட்களுடன் அவலையும் சேர்த்து தண்ணீரை விடுத்து பெரிய மிக்ஸி ஜாரில் சேர்த்து ரொம்பவும் நைசாக இல்லாமல், ரொம்பவும் கொரகொரவென்றும் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த அளவுகளின்படி அரைக்கும் பொழுது மிக்ஸியில் இரண்டு முறை போட்டு அரைக்க வேண்டியிருக்கும். ஒரே முறையில் அரைத்தால் மிக்ஸி சூடாகிவிடும். அதே போல் ஐஸ் வாட்டர் தெளித்து தெளித்து அரைத்து பாருங்கள், அவ்வளவு சீக்கிரம் மிக்சி சூடாகாது. அரைத்து எடுத்த மாவுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கைகள் கொண்டு நன்கு மாவை கரைத்து அழகாக அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். சுமார் 8 மணி நேரம் நன்கு புளிக்க விட வேண்டும். மாவு நன்கு புளித்து பொங்கி வரும் பொழுது அதை அப்படியே கரண்டி போட்டு கிண்டி விடக்கூடாது. மாவில் முட்டை முட்டையாக புளித்துப் போயிருக்கும், இதை உடைத்து விடாமல் லேசாக அப்படியே கிளறி தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் கால் கப் அளவிற்கு வறுத்த ரவை மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சர்க்கரை மற்றும் ரவை சேர்க்கும் பொழுது மொறுமொறுவென்று தோசை ரொம்பவும் சுவையாக வரும். இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு தோசைக் கல்லை வையுங்கள். தோசைக் கல் சூடானதும் ரொம்ப மெல்லிதாக தோசை மாவு ஊற்றி ஒரு புறம் மட்டும் மொறுமொறுவென்று வேக வைத்து அப்படியே சுருட்டி எடுக்க வேண்டும். ஹோட்டலில் கொடுப்பது போலவே மொறுமொறு பேப்பர் தோசை நம் வீட்டிலேயும் இப்போது தயார், இதே மாதிரி அளவுகளில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -