புதிய மண்பாண்டத்தை (மண்சட்டி) பழக்குவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது அதன் ஆயுளை நீட்டிக்கவும், சமைக்கும் போது விரிசல் ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்யும். மண் சட்டியை வாங்கியவுடன் அப்படியே பயன்படுத்த முடியாது. புதிய மண் சட்டியில் மண் துகள்கள் அப்படியே இருக்கும். சீசனிங் செய்து பின்னர் பயன்படுத்தினால், நீண்ட ஆயுளுடன் கெட்டியாக இருக்கும். ஒரு புதிய மண்சட்டியை எப்படி பழக்க வேண்டும்? என்பதற்கான வழிமுறைகளை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.
மனிதன் முதன்முதலாக தானே உருவாக்கிய பாத்திரம் மண் பாத்திரம் ஆகும். மண்ணைக் கொண்டு அவன் உருவாக்கிய இந்த மண்சட்டியில் தான் வெகு காலம் சமைத்து சாப்பிட்டார்கள். எந்த உலோக கலவையும் இல்லாத, இந்த இயற்கையான மண் சட்டியில் நல்ல குளிர்ச்சி நிரம்பி உள்ளது. இதில் காய்கறிகள், மீன், இறைச்சி போன்றவற்றை சமைத்து சாப்பிடும் பொழுது, அவ்வளவு ருசியாக மாறுகிறது. சமைக்கும் உணவு ருசிக்க பண்பட்ட மண் பாத்திரத்தை எப்படி பழக்குவது?
மண் பாத்திரத்தை முதலில் வாங்கியவுடன், அதை ஒருநாள் முழுவதும் மூழ்கும்படி தண்ணீரில் வைக்க வேண்டும். இது சட்டியில் இருக்கக்கூடிய மண் துகள், அழுக்குகளை அகற்றி நுண்ணிய துளைகளை மூடுவதற்கு உதவும். பின்னர் வெயிலில் எடுத்து நன்கு காய வைத்து ஈரப்பதம் இல்லாமல் செய்துக் கொள்ளுங்கள். இப்போது நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஏதாவது ஒன்றை சட்டியில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தேய்க்க வேண்டும்.
அடுப்பின் நெருப்பு படும் அடிப்பகுதியில் கூடுதலாக எண்ணெய் விட்டு தேயுங்கள். பின்னர் வெயிலில் உலர்த்துங்கள். இது மண் பாண்டத்தின் உறுதி தன்மையை அதிகரிக்கும். நன்கு காய்ந்த பின்னர் அரிசி கழுவிய நீரை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இது பாத்திரத்தில் உள்பகுதியில் இருக்கக்கூடிய துளைகளை மூடுவதற்கு உதவி செய்யும். தண்ணீர் கொதித்த பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். கஞ்சி தண்ணீரை நன்கு குளிர ஆறியதும் கீழே ஊற்றி விடுங்கள்.
அதன் பிறகு ஒரு முறை கடலை மாவு அல்லது அரிசி மாவு பயன்படுத்தி நன்கு தேய்த்து சுத்தமான நீரால் கழுவுங்கள். அவ்வளவுதான், இப்பொழுது மண் பாண்டம் சமைப்பதற்கு முழுமையாக தயாராக இருக்கிறது. இந்த பாத்திரத்தில் முதல்முறையாக நீங்கள் சமைக்கும் பொழுது அதிகம் வாசனை தரக்கூடிய மீன், இறைச்சி போன்ற உணவுகளை சமைக்காமல், எளிமையான உணவுகளை சமைக்க வேண்டும். காய்கறி, குழம்பு, கூட்டு என்று எளிமையாக சமைத்து பழகுங்கள்.
இதையும் படிக்கலாமே:
பணம் வேண்டுதலை நிறைவேற்றும் ஐந்து ரூபாய் பரிகாரம்
அதன் பிறகு நீங்கள் மீன், இறைச்சி போன்றவற்றை சமைத்தால் மண் சட்டியின் வாசனையோடு சேர்ந்து அந்த குழம்பு வாசத்தில் வீடே மணக்கும். ருசி தரும் இந்த மண்சட்டி பாத்திரத்தை கவனமாக எப்போதும் கையாள வேண்டும். பாத்திரத்தை வைத்தவுடன் அதிக தீயை பயன்படுத்தக் கூடாது, இதனால் விரிசல் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். குளிர்ந்த இடங்களில் உடனடியாக மண் சட்டியை வைத்தாலும், விரிசல் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மண்சட்டி உடையாமல் இருக்க, கழுவும் பொழுது வெறும் தண்ணீர் மற்றும் பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தி கழுவுங்கள். கெமிக்கல் கலந்த சோப்புகளை பயன்படுத்தாதீர்கள். புதிய மண்சட்டியில் புதிய சமையல் இனிதே ஆரம்பமாகட்டும்.