10 வகையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரேவியும் இந்த 1 மசாலாவை வைத்து செஞ்சிட முடியுமா? அது எப்படி? ‘மல்டி பர்பஸ் மசாலா’ ரெசிபி நீங்களும் தெரிஞ்சுக்க ஆசைப்படுறீங்களா?

இன்றைக்கு இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப் போகும் மசாலாவை அரைத்து, பிரிட்ஜில் வைத்து விட்டால் போதும். 10 வகையான விதவிதமான கிரேவிக்களை தினமும் ஒவ்வொன்றாக செய்து அசத்தலாம். முறையாக, பக்குவமாக இந்த மசாலாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் பட்சத்தில், 10 நாட்களுக்கு மேலும் கெட்டுப்போகாமல் இருக்கும். கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைக்க வேண்டும். அவ்வளவு தான், ஹோட்டல் ஸ்டைலில் உங்களுக்கு என்ன கிரேவி வேண்டும்? பன்னீர் பட்டர் மசாலா, மஸ்ரூம் கிரேவி, வெஜிடபிள் கிரேவி, காலிபிளவர் கிரேவி, அல்லது வேறு என்ன உங்களுக்கு பிடித்தாலும் சரி, அந்தப் பொருளை வைத்து ஐந்து நிமிடத்தில் கிரேவியை தயார் செய்து கொள்ளலாம். எப்படினு உங்களுக்கு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

masala2

Step 1:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள் சமையல் எண்ணெய் – 100 ml ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை – 4 துண்டு, ஏலக்காய் 10, கிராம்பு – 15, பிரியாணி இலை – 2, சீரகம் – 1 ஸ்பூன், இவைகளை சேர்த்து மிதமான தீயில் கருக விடாமல் வறுக்க வேண்டும். அதன்பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/2 கிலோ அளவு எண்ணெயில் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் கூட வெட்டிக் கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாகும் அளவிற்கு வதங்க வேண்டும்.

Step 2:
வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய 1 கிலோ தக்காளி பழ துண்டுகளை, வெங்காயத்தோடு சேர்த்து, பொடியாக வெட்டிய இஞ்சி – 25 கிராம், பொடியாக வெட்டிய பூண்டு – 25 கிராம் அளவு சேர்த்து, இறுதியாக 1 ஸ்பூன் அளவு உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு மூடி போட்டு 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும்.

masala1

இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றி, நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

Step 3:
அடுத்தபடியாக ஒரு சிறிய கிண்ணத்தில் 50 கிராம் அளவு முந்திரிப்பருப்பு, கசகசா 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து வெது வெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, இதையும் மிக்சி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து, அப்படியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்துக்கொள்ளுங்கள்.

munthiri-paste

Step 4:
இப்போது மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றி, மிதமான சூட்டில் இருக்கும்போதே மஞ்சள் தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 3 டேபிள் ஸ்பூன், மல்லித் தூள் – 3 டேபிள்ஸ்பூன், சீரக தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், இவைகளை சேர்த்து கருகாமல் 10 செகண்ட் வரை சிவக்க விட்டு, இப்போது முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலா வெங்காயம் தக்காளி பேஸ்டை இந்த கடாயில் சேர்த்து, நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின்பு மூடி போட்டு 20 நிமிடங்கள் வரை இந்த மசாலா கொதித்து எண்ணெய் தானாக பிரிந்து வரும்.

masala3

Step 5:
இறுதியாக அரைத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு கசகசா விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டீர்கள் என்றால், தக்காளி தொக்கு போல எண்ணெய் கக்கும். இப்போது ‘மல்டி பர்பஸ் மசாலா’ ரெடி! இதை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி நன்றாக ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டியது தான். நமக்கு தேவையான மசாலா ரெடி.

paneer-butter-masala

Step 6:
இப்போது நீங்கள் கிரேவி செய்ய தொடங்கலாம். ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளவேண்டும். 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன் அளவு, சீரகம் தாளித்து, தயாராக இருக்கும் மசாலாவிலிருந்து – 4 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து கடாயில் போட்டு, வெறும் ஒரு 1 நிமிடம் வதக்கி, கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இறுதியாக பச்சைப்பட்டாணி அல்லது மஸ்ரூம் அல்லது பன்னீர் சேர்த்து, கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு மூடி போட்டு கொதிக்க வைத்தால் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரேவி தயார்.

meal-maker-gravy

இந்த கிரேவியை நீங்கள் ரிச்சாக செய்ய வேண்டும் என்றால், எண்ணெய்க்கு பதிலாக, வெண்ணெய் சேர்த்து தாளிக்கலாம். ஃபரஷ் கிரீம் இருந்தால் இறுதியாக ஊற்றிக் கொள்ளலாம். இறுதியாக கஸ்தூரி மேத்தி தூவலாம். இல்லையென்றால் கொத்தமல்லித்தழையை தூவிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம் தான். பிரிட்ஜில் இருக்கும் அந்த ஒரு மசாலாவை வைத்து உங்கள் இஷ்டம் போல 5 நிமிடத்தில் எந்த கிரேவியை வேண்டுமென்றாலும் தயார் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் ஆயில் கேன், ஆயில் கண்டைனர்களை சுத்தம் செய்ய இவ்வளவு ஈஸியான டிப்ஸா? சொன்னா நீங்க நிச்சயம் நம்பவே மாட்டீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.