மருந்தீஸ்வரர் கோவில் சிறப்புகள்

Sivan Temple

பல முனிவர்களும், ரிஷிகளும் வாழ்ந்து இறைவனை உணர்ந்து முக்தியடைந்த நாடு பாரதம். அதனால் தான் பல எண்ணற்ற கோவில்கள் இந்த நாடு முழுவதும் நிறைந்துள்ளன. அப்படி வேண்டுபவர்களின் நோய் நொடிகளை நீக்கியும், இங்கு தவமிருந்த பலருக்கு பல சக்திகளையும், முக்தியையும் அளித்த “திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர்” கோவிலை பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

Marundeeswarar temple

மருந்தீஸ்வரர் கோயில் தல வரலாறு

சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்குமேல் பழமையான கோவிலாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் ராமாயணத்தை இயற்றிய “வால்மீகி” முனிவர் தவமிருந்து சிவனின் காட்சியை பெற்றதால் இத்தலம் இருக்கும் ஊர் “திருவான்மீகம்” என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் “திருவான்மியூர்” என அழைக்கப்பட்டது. இக்கோவிலின் மூலவர் தியாகராஜர் எனவும் அம்பாள் திரிபுரசுந்தரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். “தமிழ் முனி” அகத்தியருக்கு இத்தலத்தில் சிவபெருமான், மனிதர்களின் நோய் தீர்க்கும் மூலிகைகளின் குணங்களையும், அதைக்கொண்டு மருந்து செய்யும் முறைகளையும் கற்றுத்தந்தால் இத்தல சிவபெருமான் “மருந்தீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார்.

தல புராணங்களின் படி வசிஷ்ட முனிவர் இத்தல சிவபெருமானை பூஜிக்க, இந்திரன் தனது தேவலோக பசுவான காமதேனுவை வசிஷ்ட முனிவருக்கு தந்தான். ஒரு முறை சிவபூஜைக்கு பால் தராமல் போன காமதேனுவை வசிஷ்டர் சபித்து விட்டார். இதனால் தனது சக்திகள் அனைத்தையும் இழந்த காமதேனு, பூலோக பசுவாக மாறியது. வசிஷ்டரிடம் தன் சாபம் போக்குமாறு காமதேனு வேண்ட, இத்தல சிவபெருமானை பூஜித்தால் மீண்டும் இழந்த சக்திகள் அனைத்தையும் பெற முடியும் என வசிஷ்டர் கூறினார். அதன்படியே காமதேனுவும் தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து, வழிபட்டு தனது சக்திகளை மீண்டும் பெற்றது. இதனால் “பால்வண்ணநாதர்” என்ற ஒரு பெயரும் இந்த ஆலய இறைவனுக்கு உண்டு. “அப்பைய” தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார்.
இங்கு தவமியற்ற வந்த வால்மீகியை கண்டு மிரண்ட காமதேனு இக்கோவிலின் சிவலிங்கத்தின் மீது குதித்து ஓடியது. அதனால் ஏற்பட்ட காமதேனுவின் கால் குளம்பு அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தின் மீது காண முடிவதாக கூறப்படுகிறது.

Marundeeswarar temple

தல சிறப்பு

- Advertisement -

தினமும் இங்கிருக்கும் இறைவனுக்கு கோபூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் கர்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் “சதுர்வஸ்தம்” என்ற முறையில் கட்டப்பட்டதாகும். இங்கு கோவில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதமாக தரப்படும் விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத வியாதிகளும் குணமாக தொடங்கும் என கூறுகிறார்கள். மேலும் இத்தல விருட்சமான “வன்னி மரத்தை” சுற்றி வந்து வழிபடுவதால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்திக்கான வழிகிடைக்கும் என கூறுகிறார்கள். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இந்த ஆலயத்தின் இறைவனுக்கும், இறைவிக்கும் புதுவஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Marundeeswarar temple

கோவில் அமைவிடம்

சென்னை நகரின் புறநகர் பகுதியான திருவான்மியூரில் அமைந்திருக்கிறது “அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்”. திருவான்மியூருக்கு செல்ல நகர பேருந்துகளும், புறநகர் ரயில்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.

Marundeeswarar temple

கோவில் நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் 12.00 மணிவரை. மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

கோவில் முகவரி

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்,
திருவான்மியூர்,
சென்னை – 600 041

தொலைபேசி எண்

44 – 24410477
44 – 24422688

இதையும் படிக்கலாமே:
திருமண தோஷம் நீங்க மிக எளிய பரிகாரம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மந்திரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Marundeeswarar temple details in Tamil. Marundeeswarar temple is in Thiruvanmiyur Chennai. Here we have Marundeeswarar temple Thiruvanmiyur timings, Marundeeswarar temple history in Tamil language, Marundeeswarar temple history address in Tamil, Marundeeswarar temple contact number or phone number, Marundeeswarar koil timings. Marundeeswarar kovil varalaru and full details are here.