பொதுவாகவே மீன் குழம்பு சாப்பிடாதவர்கள் கூட, மீன் வருவல் விரும்பி சாப்பிடுவார்கள். அசத்தலான சுவையில் வித்தியாசமான மசாலா கலவையோடு மைசூர் மீன் வருவல் எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இப்படி ஒரு மசாலா சுவை நிறைந்த மீன் வருவலை இதுவரைக்கும் நீங்க சுவைத்திருக்க வாய்ப்பே இருக்காது. வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த யம்மி ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சீரகம் – 1 ஸ்பூன், லவங்கம் – 2, பட்டை – 1, ஜாதிபத்திரி மிகச் சிறிய துண்டு – 1, வர மல்லி – 1 டேபிள் ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், ஓமம் – 1/2 ஸ்பூன், கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு முதலில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 பல், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை எல்லாவற்றையும் விழுதாக அரைத்து கொள்ளுங்கள்.
அரைத்த இந்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த விழுதோடு மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன், கான்பிளவர் மாவு – 1/2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – 1 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலைகளை போட்டு நன்றாக பிசைந்து விட வேண்டும். நாம் அரைத்த மசாலாவும் நாம் சேர்த்த இந்த பொருட்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு பேஸ்ட் நமக்கு கிடைத்திருக்கும்.
இந்த பேஸ்டை சுத்தம் செய்த 1/2 கிலோ அளவு மீனின் மேலே நன்றாக தடவி விட்டு 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். எந்த மீன் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் அது உங்களுடைய விருப்பம். எல்லா வகை மீனுக்கும் இந்த மசாலா பொருந்தும். அரை மணி நேரம் மீன் நன்றாக மசாலாவில் ஊறிய பின்பு தோசை கல்லில் கொஞ்சமாக கடலை எண்ணெய் நல்லெண்ணெய் ஊற்றி இந்த மீனை போட்டு மிதமான தீயில் சிவக்க சிவக்க பொறித்து எடுத்து மேலே எலுமிச்சை சாறு பிழிந்து சுட சுட சாப்பிட்டு பாருங்கள். வேற லெவல் டேஸ்ட் இருக்கும்.
வவ்வால் மீன், வஞ்சன மீன், பாறை மீன் போன்ற மீன்களில் இந்த மசாலாவை சேர்த்து வறுத்தால் நல்ல சுவை இருக்கும். கொஞ்சம் முள்ளு இல்லாத பெரிய சைஸ் இருக்கக்கூடிய மீன்னாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலா அனைத்தும் மீனுக்கு உள்ளே போகும் வரை ஊற வைக்கனும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
மசாலா போட்ட மீன்களை அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தாலும் மசாலா மீனோடு நன்றாக ஒட்டி பிடிக்கும். உங்களுக்கு உப்பு காரம் கொஞ்சம் தூக்கலாக வேண்டும் என்றால் மசாலாவில் உப்பு, மிளகாய்த்தூளை கொஞ்சம் அதிகப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.