வெறும் இரும்பு தோசை கல் இருந்தால் போதும். ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் சூப்பரான நாண் நம்ம வீட்டிலேயே செஞ்சுக்கலாம். இந்த டிப்ஸ் மட்டும் தெரிஞ்சுக்கோங்க.

naan
- Advertisement -

நாண் என்றதுமே நம் நினைவிற்கு வருவது ரெஸ்டாரண்ட் தான். வீட்டிலேயே நாண் செய்வது கஷ்டம் என்று யாருமே முயற்சி செய்து பார்ப்பது கிடையாது. கடைகளில் வாங்கி சாப்பிடும் நாண் மைதாவை பயன்படுத்தி செய்வது. நம்முடைய வீட்டில் கோதுமை மாவை பயன்படுத்தி சூப்பரான ஆரோக்கியமான நாண் எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுக்கு தேவை என்றால் இதையே மைதா மாவிலும் செய்யலாம். இரும்பு தோசை கல்லில் தான் இந்த நாண் செய்ய வேண்டும். நான்ஸ்டிக் தவாவில் இந்த நாண் செய்ய முடியாது. வாங்க அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு அகலமான பௌலில் கோதுமை மாவு – 2 கப், உப்பு தேவையான அளவு, சர்க்கரை – 1 ஸ்பூன், பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன், தயிர் – 1/2 கப் இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக கலந்து விட்டு, சூடான பால் (1/2 கப்) கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி பிசைய வேண்டும். சூடான பாலை மொத்தமாக ஊற்றி விடக்கூடாது. தேவையான அளவு பாலை ஊற்றி பிசைந்து விட்டு மீதி பால் இருந்தால் கூட பரவாயில்லை. அப்படியே நீங்கள் அதை நிறுத்திக் கொள்ளலாம். கூடவே மாவில் 2 ஸ்பூன் ஆயிலை ஊற்றி மீண்டும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது மாவு உங்களுக்கு தயாராகி இருக்கும்.

- Advertisement -

பின்பு மேலே டிரையாகாமல் இருக்க ஆயிலை தடவி பிசைந்த மாவை ஒரு தட்டு போட்டு மூடி 20 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள். பின்பு ஊறிய இந்த மாவை எடுத்து உருண்டைகளாக தயார் செய்து கொள்ள வேண்டும். ஓரளவுக்கு பெரிய உருண்டைகளாக செய்து கொள்ளுங்கள். இந்த 2 கப் மாவிற்கு நமக்கு 6 லிருந்து 7 உருண்டைகள் கிடைக்கும்.

இந்த மாவை சப்பாத்தி பலகையில் போட்டு உங்களுடைய விருப்பமான வடிவத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். ரெஸ்டாரன்டில் ஓவல் வடிவத்தில் தான் நாண் இருக்கும் அல்லவா. அப்படி கூட தேய்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் தோலுரித்த பூண்டை மிகவும் பொடியாக துருவி வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொத்தமல்லி தழையை மிகப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாண் தேய்த்து தயாராக இருக்கிறது அல்லவா. அதன் மேல் ஒரு பக்கம் ஐந்தாறு பூண்டு பற்களை வைத்துவிட்டு, கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை தூவி, லேசாக மேலே அழுத்தம் கொடுத்து தேய்த்துக் கொள்ளவும். அப்போதுதான் பூண்டு பற்கள் கொத்தமல்லி தழைகள் கீழே விழாமல் நாண் மேலே ஒட்டி பிடிக்கும்.

இப்போது ப்ளைன் ஆக நாண் மறு பக்கம் இருக்கிறது அல்லவா. பூண்டு கொத்தமல்லி தழை ஒட்டியது ஒரு பக்கம். மறுபக்கம் எதுவும் கிடையாது. அந்த மறுபக்கத்தில் கொஞ்சமாக தண்ணீரை பிரஷால் தடவிக் கொள்ள வேண்டும். இரும்பு தோசை கல்லை நன்றாக காய வைத்து விட்டு, தண்ணீர் தடவிய பக்கம் நாணை, தோசை கல்லின் மேல் போட்ட உடனேயே நாண் தோசை கல்லில் ஒட்டி பிடித்து வேகத்தொடங்கும். ஒரு பக்கம் நாண் நன்றாக வெந்ததும், அந்த தோசை கல்லோடு எடுத்து, தோசை கல்லை கவிழ்த்து, அப்படியே ஸ்டவ்வின் நெருப்பில் நாணை காட்ட வேண்டும். (இப்படி தோசை கல்லை கவிழுக்கும் போது, நாண் கல்லை விட்டு கீழே விழாமல் இருப்பதற்காகத்தான் நாணின் ஒரு பக்கத்தில் தண்ணீரை தடவுகின்றோம்.)

நாண் மறுபக்கம் நேரடியாக நெருப்பில் வெந்து கிடைத்து விடும். மீடியம் ஃபிளேமில் வைத்து ஓரளவுக்கு நெருப்பின் மேல் நாண் படும் அளவிற்கு வைத்தாலே போதும். நாண் மறுபக்கம் வெந்து கிடைக்கும். பிறகு ஒட்டி இருக்கும் நாணை தோசை கல்லில் இருந்து எடுத்து இரண்டு பக்கமும் வெண்ணெய் தடவி சுடச்சுட ஏதாவது ஒரு கிரேவியோடு பரிமாறுங்கள். சூப்பரான சுவையில் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. ரெஸ்டாரண்டில் செய்த நாணை விட இது சாஃப்ட்டாக கிடைக்கும்.

- Advertisement -