2000 ஆண்டுகளாக கடலுக்கு நடுவில் உள்ள நவகிரக கோவில் பற்றி தெரியுமா ?

navagraga temple

ஒரு குடும்பத்திற்கு அழகே குழந்தைகளால் தான் உண்டாகின்றன. இப்படி ஒவ்வொரு தலைமுறையாக தொடர்வதற்கு பேர் தான் பரம்பரை. ஒவ்வொருவரும் தங்களின் மறைந்த பெற்றோர்கள், மூதாதையர்கள் ஆகியோர்களுக்கு நன்றியுணர்வோடு இருக்க வேண்டும். மறைந்த நமது பரம்பரையின் முன்னோர்களான பித்ருகளுக்கு உரிய காலத்தில் ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யாத காரணத்தால் பித்ரு சாபங்கள் தோஷங்கள் உண்டாகின்றன. பித்ரு தோஷம் உட்பட பல தோஷங்களை நிவர்த்தி செய்யும் “தேவிபட்டினம் அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயில்” பற்றி இங்கு நாம் அறிந்து கொள்ளலாம்.

தேவிபட்டினம் நவபாஷாண நவகிரக திருக்கோயில் வரலாறு
ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இக்கோயிலில் வழிபட்டுள்ளதால், இக்கோயிலின் தொன்மையை குறிப்பிட்டு சொல்ல இயலாததாக இருக்கிறது. ஆனால் குறைந்தது 2000 வருடங்களுக்கு மேலாக கடலில் இந்த நவகிரக கோவில் உள்ளது என்றும், இத்தனை ஆண்டுகாலத்திற்கும் பக்தர்கள் இங்கு வந்து தங்களின் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர் என்றும் வரலாறு நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர். புராண காலத்தில் இந்த ஊர் “தேவிபுரம்” என அழைக்கப்பட்டது. இக்கோயிலின் இறைவனாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த நவகிரகங்களே பிரதான தெய்வங்களாக இருக்கின்றனர். இந்த கோயிலின் புனித தீர்த்தமாக கடல் நீரே இருக்கிறது.

கோயில் புராணங்களின் படி மகிஷாசுரன் எனும் அரக்கன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இக்கொடுமைகளை பற்றி பராசக்தியிடம் தேவர்கள் கூறிய போது, தேவர்கள் மற்றும் அனைத்து லோகங்களையும் காக்க மகிஷாசுரனுடன் போரிட பராசக்தி இங்கு வந்த போது, மகிஷஷாசுரன் இங்கிருக்கும் கடலான சக்ர தீர்த்தத்தில் ஒளிந்து கொண்டான். அவனை தனது சக்தியால் வெளியே கொணர்ந்து தேவி வதம் செய்து, பின்பு அவனுக்கு சாப விமோச்சனம் வழங்கிய போது, தேவர்கள் அனைவரும் அமிர்தத்தை பொழிய அன்று முதல் தேவிபுரம் எனும் இந்த ஊர் தேவிபட்டினம் என அழைக்கப்படலாயிற்று.

devipattinam 1

இங்கிருக்கும் கடலில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி தனது கைகளாலேயே பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு நவபாஷாண சக்தியிருப்பதாக கருதப்படுவதால், இவை நவபாஷாண நவகிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இங்கு ராமபிரானுக்கு சனி தோஷம் நீங்கியதாகவும், சிவன் மற்றும் பார்வதி தேவியின் காட்சி கிடைத்து அவர்களின் ஆசிகளுடன் ராவணனுடனான போரில் ஸ்ரீராமர் வெற்றி பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் கடல் நீரில் இருந்தாலும் இன்றும் அந்த நவகிரகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன.

- Advertisement -

தேவிபட்டினம் நவகிரக கோவில் சிறப்பு

ஸ்ரீ ராமர் தன் கைகளாலேயே கடலுக்கு நடுவில் பிரதிஷ்டை செய்த நவகிரகங்கள் இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும். இந்த நவகிரகங்களுக்கும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம், ஆராதனை போன்றவற்றை செய்யலாம் என்பது விஷேஷம் ஆகும். இக்கோயிலின் கடல் தீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் நவகிரகங்களுக்கும் நவதானியங்கள் சமர்ப்பித்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டு, அன்னதானம் போன்ற தானங்களை செய்வதால் “பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம்” போன்றவை நீங்குகிறது.

devipattinam 2

மேலும் நவகிரகங்கள் தோஷ நிவர்த்திக்கும், பித்ரு சாபங்கள், முன்பிறவி பாவங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை நீக்க சிறந்த பரிகார தலமாக இருக்கிறது. தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்றவைகளை இந்த தலத்தில் கொடுப்பதால் நன்மையான பலன்களை அளிக்கும். ஆடி அமாவாசை தினத்தன்று இக்கோயிலில் பித்ரு கடன்களை செலுத்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தேவிபட்டினம் என்கிற ஊரில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கிறது. இந்த கோயிலிற்கு செல்ல ராமநாதபுரம் நகரிலிருந்து பேருந்து,வேன் போன்ற போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

எல்லா நாட்களிலும் அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கடலில் நீராடி இங்கிருக்கும் நவக்ராக்க நாயகர்களை வழிபடலாம்.

கோயில் முகவரி

அருள்மிகு நவபாஷாண நவகிரக திருக்கோயில்
தேவிபட்டினம்
ராமநாதபுரம் மாவட்டம் – 623 514

தொலைபேசி எண்

தொலைபேசி எண் இல்லை

இதையும் படிக்கலாமே:
பாணபுரிஸ்வரர் கோவில் சிறப்புக்கள்

இது பொன்பரு மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Devipattinam temple history in Tamil.