நவராத்திரியின் நற்பலன்கள்! வேண்டிய வரங்களை பெற, நவராத்திரியின் 8 மற்றும் 9ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

நவராத்திரியின் முதல் 6 நாள் வழிபாட்டை செய்ய முடியாதவர்கள் கூட, கடைசி மூன்று நாள் அன்று அம்பாளை வேண்டி, மனமார நம்முடைய வீட்டில், வழிபாடு செய்தாலும் நிறைவான பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் நவராத்திரியின் 8 மற்றும் 9ஆம் நாள் வழிபாட்டை, சுலபமான முறையில் வீட்டில் எப்படி செய்ய வேண்டும்? எந்தப் பெயரைக் கொண்டு அம்பாளை வழிபட வேண்டும்? என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

saraswathi11

நவராத்திரியின் 8ஆம் நாள் வழிபாடு:
நவராத்திரியின் 8ஆம் நாள் வழிபாட்டில் சரஸ்வதி தேவியை ‘நரசிம்மதாரணி’ என்ற பெயர் கொண்டு வழிபட போகின்றோம். இன்றைய தினம் வாசலில் தாமரை பூ கோலம் போடுவது, நம் வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை தேடி தரும். பன்னீர் ரோஜாவால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் சிலைக்கு அலங்காரம் செய்து விடுங்கள். முடிந்தால் மருதாணி இலைகளை கொண்டு சரஸ்வதி தேவிக்கு அர்ச்சனை செய்யலாம்.

இன்றைய தினம் திராட்சைப் பழம், பால் சாதத்தை நைவேத்தியமாக வைக்க வேண்டும். பச்சை நிறம் அல்லது அரக்கு நிறம் நிறத்தில் உள்ள வஸ்திரங்களை, வீட்டில் வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுக்கலாம். பச்சை நிறத்திலும் அரக்க நிறத்திலும் வளையல்கள் வாங்கி கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிப் பெண்களுக்கும் தானம் கொடுப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். இன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய அம்பாள் வழிபாடு வேண்டிய வரத்தை, வேண்டிய மார்க்கத்திலேயே பெற்றுத் தரும் அளவிற்கு சக்தி வாய்ந்த வழிபாடாக அமையும்.

kamatchi-amman

நவராத்திரியின் 9ஆம் நாள் வழிபாடு:
நவராத்திரியின் ஒன்பதாவது நாள் வழிபாட்டை சரஸ்வதி பூஜை என்று நாம் கொண்டாடுகின்றோம். சரஸ்வதி தேவியின் வழிபாட்டை நிறைவு செய்யக்கூடிய இந்த தினத்தில் குழந்தைகள் தங்களுடைய புத்தகத்திற்கு சந்தன குங்கும பொட்டு இட்டு, பூஜை அறையில் வைத்து, பூஜை செய்வதோடு விட்டுவிடாமல், அன்றைய தினத்தில் கட்டாயம் அந்த புத்தகத்தை எடுத்து வைத்து, சிறிது நேரமாவது படிக்க வேண்டும். பூஜை அறையில் அடுக்கி வைத்த புத்தகத்தை சிலர், அன்றைய தினமே கலைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். சரஸ்வதி தேவியின் வழிபாட்டை நிறைவு செய்யக்கூடிய இந்த தினத்தில் குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இன்றைய தினம் அம்பாளை ‘பரமேஸ்வரி’ என்ற பெயர்கொண்டு நாம் வழிபாடு செய்யவேண்டும்.  தாமரைப் பூக்கோலம் நம்முடைய வீட்டு வாசலில் போடுவது சிறப்பானது. அம்பிகைக்கு, முடிந்தவரை ஒரே ஒரு தாமரைப் பூவையாவது சூட்டி விடுங்கள். வெள்ளை நிற தாமரைப் பூவாக இருந்தாலும் சரி சிவப்பு நிற தாமரைப் பூவாக இருந்தாலும் சரி. மரிக்கொழுந்து கிடைத்தால் அந்த இலையால் தேவிக்கு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

marikozhunthu

இந்த ஒன்பதாவது நாளில் சர்க்கரை பொங்கலையும், நாவல் பழத்தையும் நைவேத்தியமாக வைக்க வேண்டும். இன்றைய தினம் உங்கள் வீட்டிற்கு வருகை தரும் பெண்களுக்கு வெந்தய நிற வளையலையும், ரவிக்கை துணியையும் தானமாக கொடுக்கலாம். இந்த சிறப்பான தினத்தில் அம்பாளை நினைத்து நீங்கள் வேண்டுதலை வைத்தால், எண்ணிய காரியம் எண்ணியபடியே நிறைவேறும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! சுகபோகமான வாழ்க்கையை பெற, நவராத்திரியின் 7ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.