வேப்பம்பூ பொடி செய்முறை

veppam poo podi
- Advertisement -

நம்முடைய முன்னோர்கள் அவர்களை சுற்றி இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களிலேயே மருந்துகளை தயார் செய்து அதை மருந்தாக சாப்பிடாமல் உணவாகவே உட்கொண்டு வந்தனர். அப்படிப்பட்ட மருத்துவ மிகுந்த பொருட்களுள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது தான் வேப்பமரம். வேப்ப மரத்தில் இருந்து வரும் காற்று முதற்கொண்டு அனைத்து பாகங்களும் மிகவும் மருத்துவ குணம் மிகுந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பாகங்களில் ஒன்றான வேப்பம்பூவை எப்படி பொடி செய்து தருவதன் மூலம் குழந்தைகளும் சாப்பிடுவார்கள் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வேப்பம்பூவில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் இது சிறு கசப்பு சுவை உடையதாக இருப்பதால் இதற்கு செரிமான சக்தி என்பது அதிகமாகவே இருக்கிறது. மேலும் வாயு தொல்லை, வயிற்று வலி போன்றவை குணமாகிறது. உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. குடலின் செரிமான இயக்கத்தை சீராக்குகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு – 1 குழி கரண்டி
  • உளுந்தம் பருப்பு – 1 குழி கரண்டி
  • மிளகு – 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • பாசிப்பருப்பு – 1 குழி கரண்டி
  • நெய் – 1 டீஸ்பூன்
  • வேப்பம்பூ – 1 1/2 குழி கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் வேப்பம்பூவை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் கடலைப்பருப்பு, உளுந்து, மிளகு, காய்ந்த மிளகாய் இவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.

இவை அனைத்தும் லேசாக நிறம் மாறியதும் இதனுடன் பாசிப்பருப்பையும் சேர்த்து அனைத்தையும் நன்றாக சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்தையும் வறுத்தப்பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி நெய் உருகியதும் வேப்பம்பூவை அதில் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அளவுப்படி நாம் வேப்பம்பூ பொடி தயார் செய்வதன் மூலம் வேப்பம் பூவில் இருக்கக்கூடிய கசப்பு சுவை என்பது தெரியாது.

சுட சுட சாதம் வடித்து அதில் இந்த வேப்பம்பூ பொடி சேர்த்து அதனுடன் நெய் கலந்து பிணைந்து குழந்தைகளுக்கு தருவதன் மூலம் அவர்கள் கசப்பு சுவையே அறியாமல் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே: மரவள்ளி கிழங்கு அடை செய்முறை

பல மருத்துவ குணம் மிகுந்த வேப்பம்பூவில் ரசம் வைத்து அன்றைய தினம் மட்டும் சாப்பிடாமல் இப்படி பொடி செய்து தருவதன் மூலம் இட்லி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -