பசு நெய்யில் முப்பெரும் தேவியர்கள் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, அன்னை பார்வதி தேவி ஆகியோர் ஒன்றாக தீப ஒளியில் ஒளிர்வதாக சாஸ்திரங்கள் சொல்லுகிறது. அதனால் தான் நெய் தீபம் ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும், மனதில் நினைத்த வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. வீட்டில் விளக்கு போடுவதாக இருந்தாலும் சரி, கோவிலில் நெய் விளக்கு ஏற்றுவதாக இருந்தாலும் சரி, நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. அது என்ன? என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
பொதுவாக நெய் தீபம் ஏற்றும் பொழுது, பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய நெய்யை கொண்டு தீபம் ஏற்றுவது தான் மகத்துவமானது. தற்போது இருக்கின்ற காலகட்டத்தில், கோவிலுக்கு வெளியே நிறைய கடைகளில் நெய் தீபங்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் இவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்தால், அது நெய்யே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். நெய் தீபம் என்கிற பெயரில் ஒரு மெழுகு போன்ற ஒன்றை மிக சிறிய மண் விளக்கில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
உண்மையான பக்தியுடனும், பரிசுத்தமான நெய் தீபம் ஏற்றுவதால் உண்டாகக்கூடிய புகையுடனும் நாம் பிரார்த்தனை செய்யும் பொழுது தான் இறையருள் பரிபூரணமாக கிடைக்கிறது. பசு நெய் ஊற்றி மண் விளக்கில் தீபம் ஏற்றும் பொழுது, அதிலிருந்து உண்டாகக்கூடிய புகை, நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும், தீய சக்திகளை விலக்கி, எதிர்மறை ஆற்றல்களை ஓட ஓட விரட்டி அடித்து விடும். கிரஹ தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நவகிரகங்களால் உண்டாகக்கூடிய தீவினைகள் அகன்று, சுகம் உண்டாகும்.
இவ்வளவு பலன்களை தரக்கூடிய இந்த நெய் தீபத்தை தூய்மையானதாக பார்த்து ஏற்ற வேண்டும். கோவிலுக்கு அருகில் கலப்படம் நிறைந்த தீப அகல்விளக்குகள் இருந்தால், நீங்கள் அதை வாங்காதீர்கள். வீட்டில் இருந்தே நெய் மற்றும் அகல் விளக்குகளை எடுத்துக்கொண்டு போய் இஷ்ட தெய்வத்திற்கு மனதார பிரார்த்தனை செய்து கொண்டு தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றும் பொழுதும், இதே போல வீட்டில் இருந்தே சுத்தமான எண்ணெய் கொண்டு போய் தீபம் ஏற்றுங்கள். அப்பொழுதுதான் பலன்கள் முழுமையாக கிடைக்கும்.
சக்கரத்தாழ்வார் சன்னதியில் 48 நாட்களுக்கு, 48 நெய் விளக்குகள் தினமும் ஒன்று என்று போட்டு வர, தொழில் விருத்தி உண்டாகும், வேலை தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும், வழக்குகளில் சாதகமான சூழல் நிலவி வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது நம்பிக்கை. பில்லி, சூனியம் போன்ற தீயவைகள் விலக, வீட்டில் 21 நாட்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில், வடக்கு பார்த்து நெய் தீபம் ஏற்றி வர, நல்ல பலன் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நெய் தீபம் ஏற்றி, இறை சக்தியை வழிபட, சகல விதமான பிரச்சினைகளும் நீங்கி, மன அமைதியும், புத்துணர்வும், செல்வ செழிப்பும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:
கடன்களையும் கஷ்டங்களையும் போக்கும் தேய்பிறை அஷ்டமி
தம்பதியர் ஒற்றுமைக்கு நாகர் சன்னதியில் செவ்வரளி சாற்றி, ராகு காலத்தில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வர, விரைவில் பிரச்சனை நீங்கி ஒன்றிணைவார்கள். வியாழன் கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு 21 நெய் தீபங்கள் தொடர்ந்து ஏற்றி வர திருமண தடைகள் அகலும், புத்திர பாக்கியம் விரைவில் உண்டாகும். மேலும் பல பலன்கள் நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கப் பெறுகிறது, எனவே சுத்தமான பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள்.