காலங்களுக்கு அதிபதியாகவும், எட்டுத்திக்குகளுக்கும் காவலனாகவும் திகழக்கூடியவர் கால பைரவர். அப்படிப்பட்ட கால பைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அஷ்டமி திதி தேய்பிறை, வளர்பிறை என்று இரண்டு முறை வரும். நம்முடைய கவலைகளையும், கஷ்டங்களையும், கடன்களையும், துன்பங்களையும், துயரங்களையும் நீக்குவதற்குரிய ஒரு அற்புதமான திதியாக தான் தேய்பிறை அஷ்டமி திதி திகழ்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி திதியன்று நாம் இந்த தீபத்தை ஏற்றி எப்படி வழிபட்டால் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுகமான வாழ்க்கை அமையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு கவலைகள் நீங்கும், சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும், எதிரிகளின் தொல்லை விலகும், நம்மை துன்புறுத்துகிற எந்த ஒரு செயலாக இருந்தாலும், நபராக இருந்தாலும் அது அனைத்தும் நம்மை விட்டு நீங்கும். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த கால பைரவருக்கு இந்த மூன்று தீபங்களை ஏற்றி வைத்தால் போதும். நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். அப்படிப்பட்ட தீபங்களை எப்படி ஏற்றுவது என்று இப்பொழுது பார்ப்போம்.
தேய்பிறை அஷ்டமி என்பது ஜூலை மாதம் 17ஆம் தேதி மாலை 6:34 மணிக்கு தொடங்கி ஜூலை மாதம் 18ஆம் தேதி மாலை 4:11 மணி வரை இருக்கிறது. பொதுவாகவே அஷ்டமி தினத்தில் கால பைரவருக்கு ராகு காலத்தில் தான் பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் பார்க்கும் பொழுது வெள்ளிக்கிழமை வரக்கூடிய ராகு காலத்தில் தான் பூஜைகள் என்பது நடைபெறும். இந்த ராகு காலத்தில் தான் நாம் தீபமும் ஏற்ற வேண்டும். அருகில் எந்த ஆலயத்தில் பைரவர் வீற்றிருக்கிறாரோ அங்கு ராகு கால நேரத்திற்கு செல்லுங்கள்.
அவ்வாறு செல்லும் பொழுது ஒரு சிறிய பூசணிக்காய், ஒரு தேங்காய், ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். இவை மூன்றையும் சரி பாதியாக நறுக்கி சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் தடவி குங்குமம் வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிற துணியில் 27 மிளகை போட்டு மூட்டையாக கட்டி பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி அந்த மூட்டையை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். எலுமிச்சை மற்றும் தேங்காயில் நல்லெண்ணெய் ஊற்றி சாதாரண திரியை போட்டு தீபம் ஏற்றலாம். ஒவ்வொரு தீபத்தையும் தாம்பாள தட்டில் வைத்து காலபைரவருக்கு ஆரத்தி காட்ட வேண்டும்.
அவ்வாறு தாம்பாளத்தில் வைக்கும் பொழுது சிறிது செவ்வரளி, இரண்டு செவ்வாழைப்பழம், மூன்று நெல்லிக்காயை அதனுடன் வைக்க வேண்டும். பிறகு இந்த தீபத்தை எடுத்து காலபைரவருக்கு வலது புறமாக எட்டு முறையும் இடது புறமாக எட்டு முறையும் ஆராத்தி காட்டி தீபங்கள் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். முதலில் பூசணிக்காய், அடுத்ததாக தேங்காய், மூன்றாவதாக எலுமிச்சைகனி. இவ்வாறு ஒவ்வொரு தீபத்தையும் நாம் ஆராத்தி காட்டும் பொழுது பைரவற்குரிய மந்திரமான “ஓம் பம் பைரவாய நம” என்னும் மந்திரத்தை கூறிக் கொண்டே காட்ட வேண்டும்.
பிறகு பூசணிக்காய் தீபத்தில் மிளகு வெடிப்பதை கண்ணார பார்த்து கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது என்று உணர வேண்டும். தீபம் எரிந்து முடிந்த பிறகு நெல்லிக்காய் மற்றும் வாழைப்பழத்தை அங்கு இருக்கக் கூடியவர்களுக்கு தானமாக தந்துவிட்டு வரும் வழியில் கால பைரவரின் வாகனத்திற்கு உணவு அளிக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:செல்வநிலையை உயர்த்தும் தேங்காய் வழிபாடு
சகல துன்பங்களையும் நீக்கி வாழ்க்கையில் நன்மைகளை தரக்கூடிய கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் இந்த முறையில் வழிபாடு செய்ய சகல நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.