நெய் பூசணி செய்வது எப்படி

posanikai
- Advertisement -

நாட்டு காய்களுக்கு என்று தனி மகத்துவம் இருக்கிறது. நம்மூரில் விளையக்கூடிய நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி நாம் சமைத்து உண்ணும் பொழுது அதன் மூலம் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில் இன்று மஞ்சள் பூசணிக்காயை வைத்து நெய் பூசணி எப்படி செய்வது என்று தான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மஞ்சள் பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, இ, போன்ற ஆக்சிஜனேற்றங்கள் ஏராளமாக இருக்கின்றது. மேலும் இதில் வைட்டமின் பி1, பி2, பி6, டி மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக இருக்கிறது. இதனால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய ஆரம்பிக்கும். மேலும் கல்லீரலை சுத்தப்படுத்தவும் சிறுநீரக கற்களை அகற்றவும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தூக்கமின்மை பிரச்சனையை நீக்குவதற்கும், பார்வைத் திறனை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய அற்புத காயாக மஞ்சள் பூசணி திகழ்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் பூசணி – 1/2 கிலோ
  • பச்சை வேர்கடலை – 100 கிராம்
  • தேங்காய் – 1/4 மூடி
  • வெங்காயம் – 2
  • காய்ந்த மிளகாய் – 6
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • கருவேப்பிலை – 3 கொத்து
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு அது வெடித்ததும் அதில் ஒரு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் இரண்டையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு மீடியம் சைஸில் நறுக்கி வைத்திருக்கும் பூசணிக்காயை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். மற்றொரு கடாயை எடுத்து அதில் பச்சை வேர்க்கடலையை போட்டு குறைந்த தீயில் 15 நிமிடம் வறுக்க வேண்டும். வறுத்த இந்த வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயில் அரை ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய் காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

தேங்காய் பொன் நிறமாக மாறும் அளவிற்கு வறுக்க வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வேர்க்கடலை மற்றும் வறுத்த தேங்காயை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து மீதம் இருக்கும் எண்ணையை ஊற்றி அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அப்பொழுது மசாலாவிற்கு தேவையான அளவு உப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு நாம் ஏற்கனவே வேக வைத்திருக்கும் பூசணிக்காயை அதில் சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். கடைசியாக இறக்கும் பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு இறக்கி பரிமாறலாம்.

இதையும் படிக்கலாமே: பப்பாளி லட்டு

மிகவும் அருமையான சுவையில் நெய் பூசணி தயாராகிவிட்டது. நெய் எப்படி உருகுமோ அதேபோல் நாவில் இந்த பூசணியை வைத்ததும் அது உருகி கரைந்து போய்விடும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -