பப்பாளி லட்டு செய்வது எப்படி

papaya laddu
- Advertisement -

நம் தமிழர்களின் வாழ்வில் இனிப்பு என்பது மிகவும் முக்கியமான பங்கை வகிப்பது. அனைத்து விதமான விருந்துகளிலும் இனிப்பு இடம்பெறாமல் இருக்கவே இருக்காது. அதேபோல் ஏதாவது ஒரு நல்ல நிகழ்வு நடக்கிறது என்றால் முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தான் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இனிப்பை நாம் கடையில் வாங்காமல் வீட்டிலேயே வித்தியாசமான முறையில் செய்யலாம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பப்பாளியை வைத்து லட்டு செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.

இனிப்பு என்று சொன்னதும் நம் நினைவிற்கு பல இனிப்புகள் வரும். அல்வா, ஜிலேபி, லட்டு, கேசரி, பாயாசம், இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பாக லட்டு திகழ்கிறது. லட்டை பல வகைகளில் நாம் செய்யலாம். அதிலும் பப்பாளியை வைத்து செய்யக்கூடிய லட்டுவை பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பப்பாளி – 2
  • சர்க்கரை – 200 கிராம்
  • நெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • தண்ணீர் – 2 டம்ளர்
  • ஏலக்காய் – ஒரு சிட்டிகை
  • பாதாம், முந்திரி – அலங்காரத்திற்கு

செய்முறை

முதலில் பப்பாளி பழத்தின் தோலை நீக்க வேண்டும். பிறகு அதை இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பப்பாளியை கேரட் உரசுவது போல் துருவிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் துருவி வைத்திருக்கும் பப்பாளியை சேர்க்க வேண்டும். 4 நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் இருக்கட்டும். பிறகு இதை வடிகட்டியை பயன்படுத்தி தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் வடிகட்டி வைத்திருக்கும் பப்பாளியை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இரண்டு நிமிடம் கிளறிய பிறகு சர்க்கரையை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு நெய் பிரிந்து வரும் அளவு வரும் வரை கிளறிக் கொண்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு ஏலக்காய் தூள் தூவி இரண்டு கிளறு கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். சிறிது சூடாக இருக்கும் பொழுது லட்டாக உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அலங்காரத்திற்கு லட்டிற்கு மேலே பாதாம் முந்திரி போன்ற ஏதாவது ஒரு பருப்பு வகைகளை வைத்து அலங்கரித்துக் கொள்ளலாம். சுவையான ஆரோக்கியமான பப்பாளி லட்டு தயாராகி விட்டது

இதையும் படிக்கலாமே: தும்பை கீரை கூட்டு

பப்பாளி பழத்தை பயன்படுத்தி இந்த முறையில் லட்டு செய்யும் பொழுது குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி உண்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -