நம் மனதில் இருக்கும் வேண்டுதல்களும், ஆசைகளும் நிறைவேறுவதற்கு, நினைத்த காரியம் நடப்பதற்கு கடவுளின் அருள் தேவை. கடவுளின் அருள் இருந்தால், அவரின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் போதும் நம் எண்ண ஓட்டங்களில் இருக்கும் ஆசைகள் யாவும் பரிபூரணம் அடையும். 1 ரூபாயும், கொஞ்சம் கல் உப்பும் இருந்தால் வெள்ளிக்கிழமையில் இப்படி பரிகாரம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். நினைத்தது நடக்க என்ன செய்யலாம்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை நோக்கி பயணித்து அறிந்து கொள்ள போகிறோம்.
எப்போதும் நாம் நினைத்த காரியம் வெற்றி அடைவதற்கு முழுமுதற் கடவுளான விநாயகரின் அருள் தேவை. அது போல மகாலட்சுமியின் அருள் இருந்தால் தான் நிதி சார்ந்த எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து ஆசைகள் நிறைவேறும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியின் அருள் கிடைக்க கூடிய அம்சம் நிறைந்துள்ளது. இந்த வெள்ளிக்கிழமையில் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலான காலம் சுக்கிர ஹோரை இருக்கிறது.
வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் நீங்கள் ஒரு விஷயத்தை செய்தால் அது நிச்சயம் தோல்வியை தழுவாது. அந்த அளவிற்கு சிறப்பு மிகுந்த இந்த நேரத்தை தவற விடாதீர்கள். வெள்ளிக்கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, சுத்தபத்தமாக நல்ல மங்களகரமான உடையை உடுத்திக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமையில் மஞ்சள், சிகப்பு, வெள்ளை போன்ற சாத்வீகமான நிறங்களில் உடைகளை அணிவது அன்றைய நாளை சிறப்பாக்கும்.
பின்னர் பூஜை அறைக்கு சென்று மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். மஞ்சள் மங்களகரமானது, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்தால் ஜெயம் நிச்சயம். நடக்கின்ற காரியங்கள் தடையில்லாது நடக்கும். பின் வலது உள்ளங்கையில் கொஞ்சம் கல் உப்பை வைத்துக் கொண்டு மூடி கொள்ளுங்கள். உங்கள் மனதில் இருக்கும் ஆசைகளை வேண்டுதலாக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். கல் உப்பை வைத்து இப்படி பிரார்த்தனை செய்யும் பொழுது வேண்டுதல்கள் சீக்கிரம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகளும், வேண்டுதல்களும் இறைவனிடம் வைப்பதற்கு இருக்கும். உங்களுக்கு இப்போது என்ன தேவையோ, உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல் என்னவோ, அதை மட்டும் முன் வையுங்கள். எல்லா விஷயங்களையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள், எது தேவையோ அதை மட்டும் கேளுங்கள். பின்னர் கையில் இருக்கும் உப்பை ஒரு கிண்ணத்தில் வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள்.
இதையும் படிக்கலாமே:
மாசி 1 குரு பகவான் வழிபாடு
பின்னர் அந்த உப்பு பூஜை அறையிலேயே இருக்கட்டும். ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் இந்த உப்பு இருக்கும் பாத்திரத்திற்கும் சேர்த்து ஆரத்தி, தூபம், தீபம் காண்பியுங்கள். தொடர்ந்து 21 வெள்ளிக்கிழமைகளில் இது போல சுக்கிர ஹோரையில் செய்து வர ஆசைப்பட்ட அனைத்தும் தடையில்லாமல் நடக்கும். 21 வாரங்கள் பிறகு அந்த உப்பை நீரில் விடுங்கள். நாணயத்தை பணத்துடன் சேர்த்து வையுங்கள், அதிர்ஷ்டம் தரும். சில விஷயங்கள் நமக்கு நடந்தே தீர வேண்டும் என்று தீராத ஆழ்மன ஆசையாக இருக்கும். அதனை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய அற்புதமான எளிய வெள்ளிக்கிழமை உப்பு பரிகாரம் தான் இப்பரிகாரம்! நீங்களும் முயன்று பார்த்து பயனடையுங்கள்.