- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்ததை நிறைவேற்றும் விரலி மஞ்சள் வழிபாடு

நினைத்ததை நிறைவேற்றும் விரலி மஞ்சள் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏதாவது ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று முயற்சி செய்வோம். அந்த விஷயம் நல்லபடியாக நடந்திட வேண்டும் என்பதற்காக இறைவனிடம் வேண்டுதலையும் முன்வைப்போம். பல நேரங்களில் இது நடைபெற்றாலும் ஒரு சில நேரங்களில் அந்த வேண்டுதல் நிறைவேறாமல் போவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் விரலி மஞ்சளை வைத்து மிகவும் எளிமையான முறையில் ஒரு வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விரலி மஞ்சள் வழிபாடு

மங்களத்தை குறிக்கக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் விரலி மஞ்சள். இது குரு பகவானின் அம்சம் பொருந்தியதாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பெண் தெய்வங்களுக்கு உரிய பொருளாகவும் இது கருதப்படுகிறது. அப்படிப்பட்ட விரலி மஞ்சளை வைத்து நாம் எந்த ஒரு வேண்டுதலை செய்தாலும் அந்த வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வேண்டுதலை செய்வதற்கு மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதக்கூடிய நாள் தான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நாள். அந்த நாளில் விரலி மஞ்சள் வழிபாடு செய்ய ஆரம்பித்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கல்யாணம் என்பது மே மாதம் எட்டாம் தேதி அன்று நடைபெறப்போகிறது. அன்றைய தினம் உத்திர நட்சத்திரம். உத்திர நட்சத்திரம் என்பது மகாலட்சுமி அவதரித்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் வியாழக்கிழமை. இது குபேரருக்கும், குரு பகவானுக்குரிய கிழமையாகவும் கருதப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அன்றைய திதியாக ஏகாதசி திதி திகழ்கிறது. இது பெருமாளுக்கு உரிய திதியாக கருதப்படுகிறது.

இப்படி பலதரப்பட்ட தெய்வங்களுக்கு ஏற்ற ஒரு நாளாக தான் மே மாதம் எட்டாம் தேதி திகழ்கிறது. அன்றைய நாளில் நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்ய ஆரம்பித்தோம் என்றால் அந்த வழிபாட்டின் பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும். இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பிக்கக்கூடிய நேரம் என்பது குருஹோரையான காலை 6:00 மணியிலிருந்து 7 மணி, மதியம் 1 மணியிலிருந்து 2 மணி, இரவு 8 மணியிலிருந்து 9 மணி. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த ஐந்து நாட்களும் வீட்டில் அசைவம் சேர்க்காமல் சைவத்தை கடைபிடிக்க வேண்டும். சுத்தத்தை பராமரிக்க வேண்டும்.

- Advertisement -

குரு ஹோரை வரக்கூடிய இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து வீட்டில் இருக்கக் கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி தாமரை தண்டு திரியைப் போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். முனை உடையாத நல்ல விரலி மஞ்சளாக ஐந்து விரலி மஞ்சள் எடுத்து பூஜையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதில் இருந்து ஒரே ஒரு விரலி மஞ்சளை மட்டும் எடுத்து உள்ளங்கையில் வைத்து மூடி நம்முடைய நெஞ்சுக்குழிக்குள் வைத்துக்கொண்டு நமக்கு எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை முழுமனதோடு கூறி நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்து அதில் அந்த விரலி மஞ்சள் வைக்க வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது டைமண்ட் கற்கண்டு நெய்வேத்தியமாக வைக்கலாம்.

இதே போல் தொடர்ச்சியாக 5 நாட்களும் மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக தீபமேற்றி வைத்து ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைத்து முதல் நாள் எந்த வேண்டுதலை வேண்டினோமோ அதே வேண்டுதலை வேண்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விரலை மஞ்சள் என்ற வீதம் வைக்க வேண்டும். ஐந்தாவது நாள் சித்ரா பௌர்ணமி மே மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் ஒரு மஞ்சள் நிற நூலை எடுத்து இந்த ஐந்து விரலி மஞ்சளையும் மாலையாக கட்டி அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமி ஆலயத்திற்கு எடுத்துச் சென்று மகாலட்சுமி தாயாருக்கு கொடுக்க வேண்டும். இதோடு மஞ்சள் தூள், குங்குமம், வாசனை மிகுந்த மல்லிகை பூ போன்றவற்றையும் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒருவேளை அருகில் மகாலட்சுமியின் ஆலயம் இல்லை என்பவர்கள் எந்த அம்மனின் ஆலயத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:மீனாட்சி திருக்கல்யாணம் அன்று செய்ய வேண்டிய தானம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் தொடங்கி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாள் வரை இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்