உடலுக்கும், உள்ளத்திற்கும் நன்மை தரும் எண்ணெய் குளியல் முறை

“எண்ணெய் குளியல்” என்பது பழங்கால தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு நோய் தடுப்பு முறையாகும். தற்காலங்களில் இருக்கும் தலைமுறையினரில் அனேகமாக அனைவருமே “தீபாவளி” தவிர்த்து பிற காலங்களில் எண்ணெய் குளியல் போடுவதை அறவே மறந்து விடுகின்றனர். இங்கு எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் ஏற்படும் சிறப்பான நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

எண்ணெய் குளியல் என்பது பாரதத்தில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மிகப்பழங்காலத்தில் இருந்தே கடைபிடிக்க பட்டு வரும் ஒரு இயற்கை வைத்திய முறையாகும். பொதுவாக எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு ஆண்களுக்கு புதன் மற்றும் சனி கிழமையும், பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையும் சித்தர்களால் பரிந்துரைக்க படுகிறது. இதற்கு ஒரு விஞ்ஞான ரீதியான காரணம் இருக்கிறது. ஆண்கள் உடலுழைப்பு அதிகம் கொண்டவர்களாகவும், அறிவாற்றலை அதிகளவு உபயோகித்து செய்யும் வேலைகள் போன்றவற்றை செய்பவர்களாக இருக்கின்றனர். செல்வம் மற்றும் அறிவாற்றலுக்கு அதிபதியான புதன் பகவானின் ஆதிக்கம் கொண்ட புதன் கிழமை மற்றும் உடல் உறுதிக்கும், நோயற்ற தன்மைக்கும் காரணமாக இருக்கும் சனிபகவானின் ஆதிக்கம் மிக்க சனிக்கிழமையன்றும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஆண்களுக்கு இந்த இரு கிரகங்களின் நற்சக்திகள் அதிகம் கிடைத்து அவர்கள் அனைத்து நலங்களையும் பெறுகின்றனர்.

ஒரு வீட்டில் செல்வமும், வளமையும் நிறைந்திருக்க அந்த வீட்டின் பெண்கள் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தோடு இருப்பது அவசியம். செல்வங்களுக்கும், சுக போகங்களுக்கும் அதிபதியாகவும், பெண்களின் அழகு, வசீகர தன்மைக்கும் காரகனாக “சுக்கிர பகவான்” இருக்கிறார். மேலும் தேவர்களில் அனைத்து இன்பங்களுக்கும் அதிபதியாக இருக்கும் இந்திரனுக்குரிய தினமாகவும் வெள்ளிக்கிழமை இருக்கிறது. எனவே வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்வதால் இந்த இரு தேவர்களின் அருளாசிகளும் பெண்களுக்கு கிடைத்து இல்லத்தில் சுபிட்சம் பொங்கும். பெண்களின் அழகு கூடும், முகம் பொலிவு பெற்று வசீகரம் உண்டாகும். இளமை தோற்றம் நீடிக்கும்.

காலை சூரியன் உதித்ததிலிருந்து 3 மணி நேரத்திற்குள்ளாக எண்ணெய் குளியலை மேற்கொள்ள வேண்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். தீபாவளி தினம் தவிர மீதி காலங்களில் தேங்காய் எண்ணையை குளியலுக்கு பயன்படுத்தலாம். பயன்படுத்தும் எண்ணையை சிறிது சூடாக்கி கொண்டு, ஒரு உலோக கிண்ணத்தில் அந்த எண்ணையை ஊற்றி வைத்து பிறகு உடல் முழுக்க தேய்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எண்ணையை பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றி வைத்து பயன்படுத்தக்கூடாது. உள்ளங்கையில் தேவையான அளவு எண்ணையை எடுத்து கொண்டு தலை, முகம், கை கால் தசைகள் என உடலின் அனைத்து பகுதிகளிலும் தேய்த்த பின் 30 – 45 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் எண்ணெய் தேய்த்து குளித்து வருபவர்களுக்கு உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கி, அத்தகைய சக்திகளின் தாக்கம் இவர்களின் மீது ஏற்படாமல் பாதுகாக்கிறது. நேர்மறையான சிந்தனைகள், செயல்கள் போன்றவை உண்டாகும். நேர்மறை சக்திகள் இவர்களிடம் அதிகமாகும். உடலில் இருக்கின்ற நோய்கள் நீங்கும். நோயெதிர்ப்பு திறன் அதிகமாகும். கண்பார்வை திறன் மேம்படும். உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் சோம்பல் குணம் நீங்கும். இளமை தோற்றம் மேலோங்கும். தீபாவளி தினத்தன்று அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுக்கு லட்சுமி கடாச்சம் உண்டாகி, தரித்திரம் நீங்கும்.

எண்ணெய் குளியலை நீங்கள் பிறந்த கிழமை, நட்சத்திர தினங்களில் மேற்கொள்ள கூடாது. தீபாவளி பண்டிகை தவிர்த்து ஞாயிறு, வியாழன் போன்ற கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்ய கூடாது. அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, சித்திரை, கிருத்திகை நட்சத்திர தினங்களிலும் எண்ணெய் குளியல் மேற்கொள்ள கூடாது. 60 வயதை தாண்டியவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்ப்பது நல்லது. நரம்பு கோளாறுகள் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது சூடான நீரூற்றி குளிக்க கூடாது. எண்ணெய் தேய்த்து குளித்த தினத்தன்று பகல் உறக்கம், புலால் உணவுகள், தயிர் சாதம், யோகாசனம், கடும் உடலுழைப்பு உடலின்பம் துய்ப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
நாக தோஷம் நீங்க வீட்டிலேயே செய்ய கூடிய பூஜை முறை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Oil bath procedure in Tamil.