நாக தோஷம் நீங்க வீட்டிலேயே செய்ய கூடிய பூஜை முறை

naga-dhosham

உயிர்கள் அனைத்துமே தெய்வீகத்தன்மை கொண்டது என்பது இந்து மதத்தின் நம்பிக்கையாகும். எனவே தான் பலவகையான விலங்குகளும் இறைவனின் வாகனமாக கருதப்பட்டு அந்த இறைவனுக்குண்டான அதே மரியாதையுடன் வழிபடப்படுகின்றன. இதில் “நாகப்பாம்பு” அனைவராலும் மிகுந்த பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. முற்பிறவியிலோ அல்லது இப்பிறவியிலோ பாம்புகளை கொன்றதாலும், துன்புறுத்தியதாலும் “நாக தோஷம்” ஏற்படுகிறது. இத்தோஷத்தை போக்குவதற்கு சில குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்வது நல்லது என்றாலும், அனைவராலும் நினைத்த நேரத்தில் சென்று வழிபட முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே வீட்டிலேயே நாகதோஷம் நீங்குவதற்கான பூஜையை எப்படி செய்தால் சிறப்பான பலன்களை பெறலாம் என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

naga

நாகதோஷ பூஜையை வீட்டிலேயே செய்ய நினைப்பவர்கள் எந்த ஒரு மாதத்திலும் அமாவாசைக்கு பிறகு வரும் “சஷ்டி” தினத்தன்று வீட்டின் பூஜையறையை நன்கு சுத்தம் செய்து, அரிசி மாவை கொண்டு தரையில் ஏழு நாகங்களின் உருவத்தை கிழக்கு திசையை பார்த்திருக்குமாறு வரைய வேண்டும். அப்பாம்புகளின் நீளம் நாக தோஷ பூஜை செய்பவர்களின் கையின் முழு நீள அளவிற்கு இருக்க வேண்டும்.

பின்பு ஒரு பீடத்தில் வெள்ளை துணி விரித்து, அதன் மீது தேங்காய், பழங்கள், பூக்கள் போன்றவற்றை வைத்து வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து நாகராஜர் மந்திரங்களை 27 முறை அல்லது 108 முறை துதித்து வழிபட வேண்டும். குழந்தை பேறு கிடைக்க வேண்டி நாக தோஷ நிவர்த்தி பூஜை செய்பவர்கள் கஞ்சி வடிக்காத உப்பில்லாத உணவை நாகராஜருக்கு நிவேதனம் செய்து, வழிபட்டு பின்பு அதை பிரசாதமாக சாப்பிட வேண்டும். இந்த பூஜை செய்த அன்று இரவு பால் மற்றும் பழங்களை மட்டும் உணவாக கொள்வது நல்லது.

naga-worship

வெள்ளி, செம்பு போன்றவற்றில் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவில் நாகராஜ உருவத்தை செய்து பூஜையறையில் வைத்து தினமும் வழிபட வேண்டும். “நாக சதுர்த்தி” போன்ற தினங்களில் உபவாசம் இருந்து, வீட்டில் நாக பூஜை செய்து வழிபட்டு, மாலையில் புற்று இருக்கும் கோவிலுக்கு சென்று புற்றிற்கு பால் ஊற்றி வழிபடுவதால் நாக தோஷம் நீங்கும்.

- Advertisement -

சஷ்டி தினங்களை தவிர்த்து எந்த ஒரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டில் நாக தோஷ பூஜை செய்யலாம். நாக தோஷ நிவர்த்தி பூஜையை வீட்டில் முறைப்படி செய்து வருபவர்களுக்கு நாக தோஷங்கள், சாபங்கள் போன்றவை நீங்கி திருமணமாகாதவர்களுக்கு திருமணமும், குழந்தை பேறில்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறகும் பாக்கியங்களும் உண்டாகும். கொடும் வியாதிகள், வறுமை நிலை போன்றவை ஏற்படாமல் தடுக்கும் சக்தியும் நாக தோஷ பூஜைக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே:
வளர்பிறை அஷ்டமி விரதம் இருக்கும் முறை

இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Naga dosha pooja at home in Tamil.