1 சொட்டு எண்ணெய் இல்லாமல் 1 கப் கடலை பருப்பு, 1 கப் சர்க்கரை இருந்தால் போதும், சுவையான லட்டு நொடியில் தயார் செய்யலாம்!

laddu-ladoo

எண்ணெயே இல்லாமல் எப்படிங்க லட்டு செய்ய முடியும்? என்று ஆச்சரியமாக இருக்கா? முடியும் என்பது தான் உண்மை. பேக்கரிகளில் தயார் செய்யப்படும் சாதாரண லட்டு இப்படித்தான் செய்வது வழக்கம். ஒரு தேக்கரண்டி நெய் மட்டும் இருந்தால் போதும்! ஒரு கப் கடலை பருப்புக்கு லட்டு செய்து விடலாம். இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவை இல்லை. குறிப்பிட்ட நாலைந்து பொருட்கள் இருந்தால் போதும், சட்டென்று செய்து விடலாம். அதை எப்படி செய்வது? என்பதை இனிவரும் பத்திகளில் காண்போம் வாருங்கள்!

laddu_1

கொதிக்கக் கொதிக்க இருக்கும் எண்ணெயில் கடலைமாவை தெறிக்க விட்டு பூந்திகள் பொரித்து செய்யும் லட்டை விட இந்த லட்டு எவ்வளவோ ஆரோக்கியம் மிகுந்ததாக இருக்கும். ஆனால் சுவையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. லட்டின் சுவை எப்படி இருக்குமோ! தரம் எப்படி இருக்குமோ! அதே போல தான் இருக்கும். ஆனால் ஒரு சொட்டு எண்ணெய் கூட தேவையில்லை.

லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு, சர்க்கரை – தலா ஒரு கப்
முந்திரி – ஒரு கைப்பிடி
நெய் – ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை அளவிற்கு

லட்டு செய்முறை விளக்கம்:
ஒரு கப் அளவிற்கு கடலைப் பருப்பை நன்கு அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். சுமார் 4 மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் பருப்புகளை போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு நெய் ஊற்றி காய விட வேண்டும். நெய் காய்ந்து வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு மாவை போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

நெய்யின் சூட்டிலேயே கடலை மாவின் பச்சை வாசம் போகும் வரை நன்கு பிரட்டி கொண்டே வர வேண்டும். இந்த சமயத்தில் அடுப்பை குறைவாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மாவு சீக்கிரமாகவே நிறம் மாறிவிடும். மாவு பச்சை வாசம் போக நன்கு வெந்து உதிரி உதிரியாக வந்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்னர் மாவை நன்கு ஆற விட வேண்டும். மாவு நன்கு ஆறிய பின் மீண்டும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். ஆங்காங்கே கட்டிகள் இருந்தாலும் இதனால் அவைகள் உடைந்து சீரான பதத்திற்கு நமக்கு மாவு கிடைக்கும்.

sugar-pagu

பின்னர் இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை போட்டு அதில் மூழ்கும் அளவிற்கு லேசாக தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றி விடக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். சர்க்கரை நனைந்தால் போதும். ஐந்து நிமிடத்தில் பாகு நன்கு கொதித்து ஒரு கம்பிப் பதம் வரும். அந்த சமயத்தில் அரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிண்டிக் கொண்டே வேண்டும். சர்க்கரைப்பாகு முழுவதுமாக உறிஞ்சிய பின் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒருமுறை கிளறி கொள்ளுங்கள்.

laddu0

இப்போது அப்படியே ஆற விடுங்கள். நன்கு ஆறிய பின் தேவையான அளவிற்கு நெய் சேர்த்து அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு பொடி பொடியாக நறுக்கி வைத்த முந்திரிகளைப் போட்டு சிவக்க வறுத்து தாளித்துக் கொட்டவும். முந்திரி பருப்புகளை சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை. எண்ணெய் ஊற்றாமல், பூந்தி பொரிக்காமல் இப்போது லட்டுக்கு தேவையான மாவு தயார். தேவையான அளவிற்கு உருண்டைகளாக பிடித்து வையுங்கள். மிகவும் சுலபமாக ஆரோக்கியமான, சுவையுள்ள லட்டு வீட்டிலேயே செய்து விடலாம். நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.